2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

கும்பமேளாவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட தீவிரவாதி

Freelancer   / 2025 மார்ச் 10 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினால் வெளிநாட்டில் சிறந்த வாழ்க்கை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர் என உத்தர பிரதேச்த்தில் கைதான தீவிரவாதி வாக்குமூலம் அளித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக, பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) தீவிரவாதி லஜர் மசி (29) கடந்த 6ஆம் திகதி உ.பி.யின் கவுஷாம்பி நகரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் (எஸ்டிஎப்) விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து எஸ்டிஎப் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை அடுத்த குர்லியான் கிராமத்தைச் சேர்ந்த லஜர் மசி, 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் விவசாய வேலை செய்துள்ளார். அப்போது உள்ளூர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, ஜெர்மனியின் பிகேஐ அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தானின் உளவு (ஐஎஸ்ஐ) அமைப்புடனும் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, பாகிஸ்தான் எல்லையிலிருந்து ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்குள் ஆயுதங்களை கடத்தினால் நிறைய பணம் தருவதாக ஐஎஸ்ஐ சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கில் பஞ்சாபில் கைது செய்யப்பட்ட மசி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கிருந்து தப்பி உள்ளார். பின்னர் உ.பி.க்கு வந்த மசி, ஐஎஸ்ஐ அமைப்பினரின் உத்தரவுப்படி கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலை நடத்திய பிறகு போர்ச்சுகல் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் அங்கு சிறந்த வாழ்க்கை அமைத்து தரப்படும் என்றும் ஐஎஸ்ஐ அமைப்பினர் உறுதி அளித்ததாக மசி தெரிவித்துள்ளார்.

ஆனால், பாதுகாப்புப் படையினரின் கெடுபிடியால் அவருடைய திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அத்துடன் அவரை கைது செய்து விட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .