2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Editorial   / 2024 டிசெம்பர் 02 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் இன்று நாள் (டிச.2) முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று (02)  காலை 11 மணிக்கு கூடின. மக்களவை முதலில் கேள்வி நேரம் தொடங்கியது. திறன் மேம்பாடு தொடர்பாக ஆந்திரப் பிரதேச எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதில் அளித்தார். அதேநேரம், எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி, மணிப்பூர் விவகாரங்களைச் சுட்டிக்காட்டி நீதி வேண்டும், நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். உறுப்பினர்கள் அமைதி காக்குமாறும், கேள்வி நேரம் தொடர அனுமதிக்குமாறும் சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், தொடர்ந்து அமளி நிலவியதால் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

அவை மீண்டும் கூடியதும் சபாநாயகர் இருக்கையில் சந்தியா ரே அமர்ந்து அவையை நடத்த தொடங்கினார். எதிர்க்கட்சிகள் அளித்த ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்று அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்த சந்தியா ரே, ஒத்திவைப்பு தீர்மானங்களுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை என்பதால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என குறிப்பிட்டார். இதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, தேஜ்வீர் சிங் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அவை சார்பாக அதன் தலைவர் ஜக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை என 20 பிரச்சினைகள் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை ஏற்க முடியாது. அவையில் கேள்வி நேரம் தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்டதால் அவை முதலில் நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவை திட்டமிட்ட ரீதியில் மட்டுமே நடைபெறும் என்றும் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோள் ஏற்கப்படாததை அடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக தன்கர் அறிவித்தார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் முடங்கின.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .