2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஈரான் ஜனாதிபதி மறைவு இந்தியாவிலும் துக்க தினம்

Freelancer   / 2024 மே 21 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரான் - அஜர்பைஜான் எல்லையில் நடைபெற்ற அணை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்று (20) ஹெலிகொப்டரில் திரும்பியபோது, அது ஜோல்ஃபா பகுதியில் உள்ள அடர்ந்த வனம் மற்றும் மலைப் பகுதியில் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டது. அதே சமயம் இந்த விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்த விபத்து நடந்து சுமார் 17 மணி நேரத்திற்குப் பிறகு ஹெலிகொப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.

இதனையடுத்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்த விபத்தில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஓமர் ஹொசைன் ஆகியோரின் உடல்கள் மீட்புப்படையினரால் கண்டெடுக்கப்பட்டன. அப்போது கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

அதன் பின்னர் ஹெலிகொப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஈரானில் உள்ள புனிதத் தலமான இமாம் ரேஸாவில் வைத்து அந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வனப்பகுதியில் நிலவிவந்த மூடுபனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவுக்கு உலகத்தலைவர்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மறைந்த இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. ஈரானின் தற்காலிக ஜனாதிபதியாக 68 வயதாகும் துணை ஜனாதிபதி முகமது மொக்பெர் நியகிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஈரான் ஜனாதிபதியின் மறைவையொட்டி இலங்கையில் இன்று துக்கதினம் அனுஷ்டிக்கும் அதேநேரம், இந்தியாவிலும் இன்று (21) ஒருநாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் இன்று பறக்கவிடப்பட்டுள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .