2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை

Editorial   / 2024 நவம்பர் 19 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ள வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் விதிமுறையை நீக்குவதற்கான இரண்டு மசோதாக்களை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை திங்கள்கிழமை நிறைவேற்றியது.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ள வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்ற விதியை நீக்குவதற்காக ஆந்திரப் பிரதேச அரசு ஆந்திரா பஞ்சாயத்து ராஜ் (திருத்தம்) மசோதா, 2024 மற்றும் ஆந்திர நகராட்சி சட்ட (திருத்தம்) மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, மே 1994 இல், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம், கிராம பஞ்சாயத்துகள், மண்டல் பிரஜா பரிஷத்கள் மற்றும் ஜில்லா பரிஷத்களுக்குத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு 2 குழந்தை விதிமுறையை கட்டாயமாக்கும் திருத்த மசோதாவை நிறைவேற்றியது.

இதன்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் அல்லது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களாக கருதப்பட்டனர். இச்சட்டம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது.

குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பிறகு, பெண்கள் மற்றும் குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு ஊக்கமளிக்க வேண்டிய நேரம் இது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபகாலமாக பேசி வருகிறார். இது ஒரு பொருளாதார கட்டாயம் என்றும் கூறி வருகிறார்.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) 2019-21 இன் படி, ஆந்திரப் பிரதேசத்தில் பெண்களிடையே (15-49 வயது) மொத்த கருவுறுதல் விகிதம் தற்போது ஒரு பெண்ணுக்கு 1.7 குழந்தைகளாக உள்ளது. இதன்படி NFHS-4 (2015-16) மற்றும் NFHS-5 இடையே கருவுறுதல் 0.2 குழந்தைகளாக குறைந்துள்ளது.

தற்போது திருமணமான பெண்களில் 77 சதவீதமும், 15-49 வயதுடைய ஆண்களில் 74 சதவீதமும் இனி குழந்தைகளை பெற விரும்பவில்லை, ஏற்கனவே அவர்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளனர் அல்லது கருத்தடை செய்யப்பட்ட மனைவியைக் கொண்டுள்ளனர். மற்றொரு குழந்தை வேண்டும் என்று விரும்புபவர்களில், 22 சதவீத பெண்களும், 26 சதவீத ஆண்களும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் காத்திருக்க விரும்புகிறார்கள்.

91 சதவீத பெண்களும், 86 சதவீத ஆண்களும் சிறந்த குடும்ப அளவை இரண்டு அல்லது அதற்கும் குறைவான குழந்தைகளாக இருப்பதை கருதுகின்றனர். ஆந்திராவில் நகர்ப்புறங்களில் மொத்த கருவுறுதல் விகிதம், ஒரு பெண்ணுக்கு 1.47 குழந்தைகள் ஆகவும், கிராமப்புறங்களில் ஒரு பெண்ணுக்கு 1.78 குழந்தைகள் எனவும் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X