2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

பக்தன் பிரகலாதனைக் காக்கபகவான் விஷ்ணுஎடுத்தநர சிம்ம அவதாரம்

Freelancer   / 2024 மே 22 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகெங்கும் உள்ளபக்தர்களால் இன்று மே 22 ஆம் திகதி நரசிம்ம அவதாரத்தையொட்டி நரசிம்ம ஜெயந்தி மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் கொண்டாடப்படுகிறது.

பரித்ராணாய ஸாதூநாம், விநாசாய சா துஸ்கிருதாம்
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய, ஸம்பவாமியுகேயுகே

எப்பொழுது எங்கு தர்மம் தலை சாய்ந்து அதர்மம் தலையோங்குகிறதோ, அப்பொழுது, அங்கு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் யுகந்தோறும் அவதரிக்கின்றேன்.
(பகவத்கீதை 4:8)

இதற்கமைய, பகவான் விஷ்ணு எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். புகவத புராணத்தின்படி பகவான் விஷ்ணு (கிருஷ்ணா) தன் முன்னைய அவதாரமானவரான (பன்றி) அவதாரத்தில் அசுரன் ஹிரண்யக்சனை வதம் செய்தார். தனது தம்பி கொல்லப்பட்டதால் பகவான் விஷ்ணுவையும் அவரின் பக்தர்களையும் பழிவாங்க வேண்டுமென்று நெஞ்சில் வஞ்சம் கொண்டிருந்தான் அசுரன் ஹிரண்யகசிபு.

அதனால் மகாபராக்கிரமமும், மரணமே இல்லாத நிலையையும் அடையவேண்டுமென்பதற்காக அவன் பிரம்ம தேவனை நோக்கி தவம் செய்யலானான். இறுதியில் பிரம்மா தோன்றி அவனுக்கு வரமளிக்க முன்வந்தார்.
ஹிரண்யகசிபு தனக்கு மரணமேயில்லாத வரம் வேண்டுமென்று கேட்டான்.

பிரம்மா அதற்கு மறுப்பு தெரிவித்தார். ''நானே ஒருநாள் மரணமடைவேன். அப்படி இருக்கையில் உனக்கு எப்படி மரணமேயில்லாத வரத்தைக்கொடுக்க முடியும்? அதனால், அப்படி ஒரு வரத்தை தரமுடியாது" என்று பிரமன் கூறினார். அதனால், ஹிரண்யகசிபு அதற்கு நிகரானதென கூறும் வகையிலான இன்னொரு வரத்தைக் கேட்டான்.

அதாவது எந்த உயிரினங்களாலோ, வீட்டின் உள்ளேயோ வெளியிலோ, பகலிலோ, இரவிலோ, பூமியிலோ ஆகாயத்திலோ, எந்தவொரு ஆயுதத்தாலோ, மனிதராலோ, தேவர்களாலோ, விலங்குகளாலோ தான் கொல்லப்படக்கூடாதென்னும் வரத்தைக் கேட்டான்.

பிரம்மாவும் அந்த வரத்தைக் கொடுத்துவிட்டு மறைந்தார். அசுரன் ஹிரண்யகசிபுவாகப் பிறவியெடுத்தவன், பகவான் விஷ்ணுவையும் அவரைப் பின் பற்றுபவர்களையும் எதிர்ப்பதற்காக கடும் தவம் செய்துகொண்டிருக்கையில், அவனுடைய கர்ப்பிணி மனைவியை இந்திரன் சிறைபிடித்துச் செல்கிறான்.

ஹிரண்யகசிபு இனி உயிருடன் திரும்பி வரமாட்டான் என்னும் எண்ணத்திலும் அவனுக்குப் பிறக்கும் குழந்தையும் ஹிரண்யகசிபுவைப் போன்ற கொடிய அசுரனாகத்தான் இருக்குமென்றும் அதனால் அதனைக் கொல்லும் நோக்கத்திலுமே அவளை சிறைபிடித்துச் செல்கிறான்.

இவ்வேளையில், முக்காலமும் உணர்ந்த நாரதர் எதிர்கொண்டு ஹிரண்யகசிபு வரத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வரத்தான் போகிறான் என்றும், அவனுக்குப் பிறக்கப்போகும் குழந்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாக இருக்குமென்றும் கூறுகிறார். அத்துடன், ஹிரண்யகசிபுவின் மனைவியை தனது ஆசிரமத்தில் வைத்துப் பராமரிப்பதாகக் கூறி, அவளை அழைத்துச் செல்கிறார்.

ஆசிரமத்தில் வைத்து ஹிரண்யகசிபுவின் மனைவிக்கு செய்யும் போதனைகளைகளை அவள் வயிற்றிலுள்ள சிசு ஆர்வத்துடன் செவிமடுப்பதை அறிந்துகொண்ட நாரதர், அவள் உறங்கும் வேளையிலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் போதிக்கிறார். இதனால் வயிற்றில் இருக்கையிலேயே அக்குழந்தை பகவான் பற்றிய முழுமையான அறிவைப் பெற்றுக்கொள்கிறது.

ஆசிரமத்திலேயே பிறக்கும் அக்குழந்தைக்கு பிரகலாதன் என பெயரிடப்படுகிறது. பிரம்மாவிடம் வரத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பி வரும் ஹிரண்யன், மிகுந்த ஆணவத்துடன் செயல்படுகிறான். மூவுலகிலும் தனது நாமத்தையே ஜெபிக்கவேண்டுமென்று உத்தரவிடுகின்றான். அசுரர்களுக்கு தேவர்களை அடிமைகளாக இருக்க வைக்கிறான். பகவான் விஷ்ணுவைப் பழி தீர்ப்பதற்காக அவரைத்தேடி அழைகிறான்.

தன்மகன் பாலகன் பிரகலாதனைப் பார்க்கையில் அவனுக்கு வேதனையும் கோபமும் ஏற்படுகின்றன.
காரணம் தன் புதல்வன் எப்பொழுதும் ஸ்ரீமன் நாராயணன் நினைவாக இருப்பதும், அவர் பக்தனாக இருப்பதும் தான். ஆவனை குருகுலத்தில் சேர்த்து படிக்கவைக்க முயற்சித்தபோது, அவனோ குருகுல பிள்ளைகளுக்கும் பகவான் ஹரியின் மகிமைகளைக்கூறி அவர்களையும் பக்தர்களாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றான்.

ஹிரண்யன் அவன் மனதைமாற்ற எவ்வளவு முயற்சித்தும் அவையெல்லாம் பயனற்றுப்போகின்றன. இதனால் மிகுந்த ஆத்திரமுற்று பிரகலாதனைப் பாலகன் என்றும் பாராமல்  கொல்ல முடிவு செய்கிறான்.

பிரகலாதனுக்கு நஞ்சூட்டியும், நச்சுப்பாம்புகளைக் கொண்டு தீண்டவைத்தும், தீயில் போட்டும், கடலில் மூழ்கவைத்தும், பட்டத்துயானையைக் கொண்டு மிதிக்கவைத்தும் எத்தனையோ விதங்களில் கொல்ல முயற்சித்தும் ஒவ்வொரு முறையும் பகவான் விஷ்ணு அவனைக் காப்பாற்றிவிடுகிறார்.

பிரகலாதனுக்கு எத்தகைய துன்பங்களைவிளைவித்தபோதும் எந்தவித துன்பங்களும் இன்றி அவனை பகவான் காப்பாற்றுவதாக அவன் வாயினாலேயே கூறக்கேட்ட ஹிரண்யன் 'அந்த ஹரி எங்கே இருக்கிறான்? ஆவனை எனக்குக் காட்டு" என்கிறான்.

அதற்கு பிரகலாதன் "அவர் இல்லாத இடமே இல்லை. தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்" என்று கூறுகிறான்.

ஆத இரவும் அல்லாத பகலும் அல்லாத மாலை மங்கிய கருக்கல் நேரம். அந்த நேரத்தை மக்கள் இப்பொழுதும் ஹிரணியநேரம் என்று கூறுவதோடு பலர் அந்த நேரத்தில் நற்காரியங்களில் ஈடுபடுவதையும், உணவு உட்கொள்வதையும் தவிர்க்கின்றனர்.

பிரகலாதன் கூறியதைக்கேட்ட ஹிரணியன் அங்கிருந்த தூண் ஒன்றைக் காட்டி (அந்தத்தூண் அரண்மனைக்கு உள்ளேயும் அல்லாமல் வெளியேயும் அல்லாமல் ஓர் ஓரமாக அமைந்திருந்தது) இந்தத் தூணிலும் அந்த ஹரி இருக்கிறானா? என்று கேட்டான்.

பிரகலாதனோ 'எந்தத் தூணிலும் இருக்கிறார்" என்று கூறவே ஹிரணியன் மிகுந்த கோபங்கொண்டு தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை ஓங்கி அடிக்கிறான்.

உடனே தூணைப் பிளந்துகொண்டு உள்ளிருந்து நரசிம்மமூர்த்தி (பாதி மனித பாதி சிங்க உருவில்- அது மனிதனோ மிருகமோ தேவரோ அல்லாத உருவம்) வெளியில் வருகிறார்.

ஹிரணியன் 'இதென்ன விசித்திரமான உருவம்" என்று ஆச்சரியப்பட்டு அதனைத் தாக்க முனைகிறான். ஆனால் நரசிம்மர் அவனை அலாக்காகத் தூக்கித் தன்மடியில் வைத்து (அது பூமியும் அல்லாத ஆகாயமும் அல்லாத இடம்) தனது கூறியநகங்களால் (அவை எந்தவொரு ஆயுதமும் அல்ல) அவன் வயிற்றைக் கிழித்து அவனை வதம் செய்துவிடுகிறார்.

இந்த நரசிம்ம அவதாரத்தின்போது எந்தவொரு தேவராலும் அவரை சாந்தப்படுத்த முடியவில்லை. அவர் அருகில் செல்லவே அனைவரும் பயந்தனர். பின்னர் தேவர்கள் எல்லோரும் பிரகலாதனிடம் 'பிரகலாதா, உன்னால் தான் பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்தார். ஆவரை உன்னால் தான் சாந்தப்படுத்த முடியும்" என்று கூறவே, பிரகலாதன் துதிபாடி அவரை சாந்தப்படுத்துகிறான். பகவானும் விஷ்ணுவாக சாந்த சொரூபியாகக் காட்சியளித்து அனைவருக்கும் ஆசி வழங்குகிறார்.

பகவான் நரசிம்மர் பக்தர்களை பேராபத்துக்கள், பெருந்துன்பங்களில் இருந்துகாப்பவர். பகவான் நரசிம்மருக்கு நம் வணக்கங்களைச் செலுத்துவோம்.

 

ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி
கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் இன்று22ஆம் திகதிநரசிம்ம ஜெயந்தி வெகு சிறப்பாகக் கொண்டாப்படவிருக்கிறது. மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டுபகவான் நரசிம்மரின் அருளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கிருஷ்ணப்பிரியன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .