Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 21 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர். ராஜலிங்கம்
இனிய சொற்கள் எவ்வாறு நன்மை பயக்கின்றன என்பது பற்றியும், அவ்வாறே தீய சொற்கள் எவ்வாறு தீமையை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.
இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று. இது திருக்குறள். அறம் பயக்கும் இனிய சொற்கள் இருக்கையில் அவற்றைக் கூறாமல் பாவம் பயக்கும் இன்னாத சொற்களைக் கூறுவது இனிய கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு விட்டு காஞ்சிரங்காய் போன்ற நச்சு கனிகளை உண்பது போன்றதாகும்.
இதில் எத்தகைய உண்மை பொதிந்திருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
நாம் ஒருவரை வாழ்த்தும்போது நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறோம். அது உளப்பூர்வமான வார்த்தைகள்தானே. அவர் நிச்சயம் நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும், வாழ்வார் என்னும் நம்பிக்கையில்தானே அப்படி வாழ்த்துகிறோம்.
அதுமட்டுமல்ல, இறைவன் புகழ் பாடுகிறோம். அது இறைவனின் காதுகளில் ஒலிக்கும் என்ற நம்பிக்கையில்தானே அப்படி செய்கிறோம்.
ஆனால் சிலர் எப்பொழுதும் தீய வார்த்தைகளைப் பேசுகிறார்கள், திட்டுகிறார்கள். கேலியாகக் கூட தீய வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இந்த வார்த்தைகளும் பலிக்கத்தானே செய்யும். இதை யாராவது சிந்திக்கிறார்களா? ஏதோ விளையாட்டாக பேசுவதாக நினைத்து தீய வார்த்தைகளைக் கூறுகிறார்கள். இதுவும் நிச்சயம் பலிக்கத்தான் செய்யும் என்பதை அவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை.
இந்த தீய வார்த்தைகள் எவ்வளவு கொடூரமானவை என்பது பற்றி மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்வின் மூலம் அறிவோம்.
சகோதர ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும் பஞ்சபாண்டவர் சகோதரர்களுக்குள்ளும் பிணக்கு ஏற்பட்டு உள்ளது என்றால் அது சாதாரணமானதல்ல. கொலை செய்யும் அளவுக்கு கொடூரமானது. மூத்தவன் தர்மர்மீது ஏனைய நான்கு தம்பிகளும் மிகுந்த பக்தியும் மரியாதையும் உடையவர்கள்.
மூத்தவன் தர்மனும் அப்படித்தான். நான்கு தம்பிமார்களையும் தன் உயிரினும் மேலாக நேசித்தவன்.
பஞ்சபாண்டவர்களில் பீமனும், அர்ச்சுனனும் மிகுந்த பலசாலிகள். ஏனைய சகோதரர்களும் வீரர்கள்தான். என்றாலும் இந்த இருவர் மட்டும் மகாவீரர்கள்.
பஞ்ச பாண்டவர்களும் திரௌபதியும் வனவாசத்தில் இருந்தபோது அன்றாடம் சேகரிக்கும் உணவுகளை மூத்தவனான தருமன் இரண்டு பங்குகளாக பிரித்து அதில் ஒரு பங்கை அதாவது கிடைக்கும் உணவில் அரைவாசியை அப்படியே பீமனுக்குக் கொடுத்துவிடுவான். மிகுதி ஒரு பங்கை அதாவது கிடைக்கும் உணவில் அரைவாசியை 5 பங்குகளாக பிரித்து ஏனைய நான்கு சகோதரர்களும் திரௌபதியும் உண்பார்களாம். ஏனெனில் பீமன் பெருந்தீனி தின்பவன். அப்படி இருந்தும் இரவில் பீமன் உறங்கும்போது தருமன் அவனைப்பார்த்து உணவு போதாததால் தம்பியின் உடல் மெலிந்து வருகிறதே என்று கண்ணீர் உகுப்பானாம். அப்படியெனில் அவன் தம்பிமார் மீது எத்தகைய அன்பு வைத்திருந்தான் என்று அறிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கு பற்றி பார்ப்போம்.
இந்த பிணக்கானது அர்ச்சுனனுக்கும் மூத்தவன் தர்மனுக்கும் இடையில்தான் ஏற்பட்டது.
மகாபாரத யுத்தம் நடந்து கொண்டிருந்த போது ஒரு சந்தர்ப்பத்தில் எதிரிகள் வகுத்த வியூகத்திலிருந்து தப்பிவர முடியாமல் மிகுந்த சிரமப்பட்டே வெளியில் வந்தான் தர்மன். அவனுக்கு இவ்வேளையில் தன்னை காப்பாற்ற சகோதரர்கள் எவரும் வரவில்லையே என்று ஆத்திரம் ஏற்பட்டது. வெளியில் வருகையில் எதிரில் அர்ச்சுனன் வருவதைக் கண்டதும் அவன் மீது ஆத்திரம் அடைந்தான்.
உன்னிடம் ஆயுதம் எதற்கு? அதனைக் கொண்டு போய் யாராவது பேடியிடம் கொடு என்று தர்மன் கோபமாகக் கூறினான்.
அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அர்ஜுனன் அண்ணன் என்றும் பாராது தர்மனைக் கொல்வதற்கு தயாரானான். அது கண்ட கண்ணன் உங்களுக்குள் பிரச்சினை வரலாமா? கூடாது என்று அவனை தடுக்க முயன்றார். ஆனால் அர்ஜுனனோ அது ஒருபோதும் முடியாது என்னிடம் உள்ள ஆயுதத்தை பேடியிடம் கொடு என்று கூறுபவர் யாராக இருந்தாலும் அவரைக் கொல்ல வேண்டும் என்பது தான் நியதி. அதை மீற முடியாது. அதனால்தான் அண்ணன் தர்மனை நான் கொன்றே ஆக வேண்டும் என்று கூறினான். இந்த சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு கண்ணன் ஒரு மாற்று வழியை கூறுகிறார்.
அதாவது மூத்தவர்களை அவமரியாதையாக திட்டும் செயலானது அவர்களை கொலை செய்வதற்கு சமமானதாகும். அதனால் நீயும் தருமனை கெட்ட வார்த்தைகளால் திட்டி வி;டு. அது அவரை கொலை செய்ததற்கு சமமாகி விடும் என்று அறிவுரை கூறினார்.
அதாவது மூத்தவர்களை அவமரியாதையாக திட்டும் செயலானது அவர்களை கொலை செய்ததற்கு சமமாகும் என்று கூறுகிறார். அர்ஜுனனும் அதன்படி தர்மனைக்கெட்ட வார்த்தைகளால் திட்டி அவனை கொலை செய்த பாவத்தை ஏற்றுக் கொள்கிறான்.
இதிலிருந்து மூத்தவர்களை அவமதிக்கும் மற்றும் மரியாதைக் குறைவாக நடத்தி தீய வார்த்தைகளால் திட்டும் செயல்களை இளையவர்கள் செய்து கொலை பாதகத்துக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பது தெளிவாகப் புலனாகின்றது அல்லவா? எத்தனையோ குடும்பங்களில் பிள்ளைகள் பெற்றோரை அவமரியாதையாகத் திட்டுவதைக் காணமுடிகிறது.
இவர்களெல்லாம் இதை உணர வேண்டும். இனிய வார்த்தைகளால் பேசி பிறரை மகிழ்விக்க வேண்டும் அப்படி செய்யும்போது எதிரிகள் கூட நண்பர்களாகி விடுவார்கள்.
இனி நல்ல சொற்கள் எத்தகைய நன்மை பயக்கக் கூடியவை என்பது பற்றி ஒளவையாரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.
ஒளவையாருக்கு கூழுக்கு பாடி என்று ஒரு பட்டப் பெயரும் உண்டு. அவருக்கு யாராவது ஒரு கோப்பைக் கூழ் கொடுத்தால் அதற்கும் அவர் மீது கவி பாடுவார். அதனால்தான் அவருக்கு கூழுக்குப் பாடி என்ற பெயர் ஏற்பட்டது. ஒளவையார் வாழ்ந்த காலத்தில்தான் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் போன்ற பெரும் புலவர்கள் எல்லாம் வாழ்ந்தனர், அக்காலத்தில் கம்பர் ஒரு பாட்டுக்கு ஆயிரம் பொன் தந்தாலன்றி யார் மீதும் பாடுவதில்லை என்று கூறியிருந்தார்.
அவ்வேளையில் சோழநாட்டில் சிலம்பி என்று ஒரு பெண் இருந்தாள். கம்பரால் பாடப்படுபவர்கள் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்வதாக கேள்விப்பட்ட அவள் தன்மீது ஒரு கவிதை பாடும்படி கம்பரிடம் கேட்டாள்.
கம்பரோ ஒரு பாட்டுக்கு ஆயிரம் பொன் தந்தால் அன்றி பாட முடியாது என்று கூறினார். அந்தப் பெண் தன் வீட்டில் சேகரித்து வைத்திருந்த ஆபரணங்கள், பொருட்கள் எல்லாவற்றையும் விற்று 500 பொன் மட்டும் கிடைக்கவே அதைக் கொண்டுபோய் கம்பரிடம் கொடுத்தாள்.
ஐயா என்னிடம் 500 பொன்தான் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு இந்த ஏழையின் மீது ஒரு கவி பாடுங்கள் என்று தயவுடன் கேட்டாள். கம்பர் அதனைப் பெற்றுக்கொண்டு நாம் பாடுவது ஆயிரம் பொன்னுக்கு ஒரு பாட்டு. 500 பொன்னுக்கு அரை பாட்டுத்தான் பாடுவேன் என்று கூறி தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனேமண்ணாவதும் சோழ மண்டலமே என்று இரண்டு அடிகளைப் பாடி அவள் வீட்டு வாயிலின் மேல் சுவரில் எழுதிவிட்டுச் சென்றார்.
அந்தப் பெண்ணும் ஐயோ இதென்ன பேராசை பெருநட்டம் ஆகிவிட்டதே. கையில் இருந்த பொருட்களையெல்லாம் விற்று வறுமையை வாங்கிக் கொண்டோமே என்று மனம் மிக வருந்தி உண்ண உணவுக்கும், உடுக்க உடைக்கும் வழியில்லாமல் வேதனைப் பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் ஒளவையார் அவள் வாழும் தெருவில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஊழ்வினையாலோ என்னவோ அவர் அந்தப் பெண்ணின் வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்தார்.
பின்னர் ஒளவையார் அந்தப் பெண்ணை நோக்கி அம்மா அதிக பசியாக இருக்கிறது. கொஞ்சம் கூழாவது கஞ்சியாவது கொடுப்பாயா? என்று கேட்டார். உடனே அந்தப் பெண் உள்ளே போய் தான் குடிப்பதற்காக கரைத்து வைத்திருந்த கூழை ஒரு பாத்திரத்தில் (அந்த ஒரு பாத்திரம்தான் அவளிடம் இருந்தது) ஊற்றி எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து உபசரித்தாள். ஒளவையார் அந்தப் பெண்ணின் உபசரிப்பில் மனம் மிக மகிழ்ந்து கூழை குடித்து களைப்பு தீர்ந்து இருக்கையில் சுவரில் கம்பரால் எழுதப்பட்ட இரண்டு அடியை வாசித்து பார்த்துவிட்டு அம்மா இது என்ன என்று கேட்டார். அந்தப் பெண் தனக்கு நடந்ததை எல்லாம் அவரிடம் விளக்கிக் கூறினாள்.
ஒளவையார் உடனே இரண்டு வரிகளை எழுதி அந்தப் பாடலைப் பூர்த்தி செய்தார். அதாவது கம்பர் எழுதியிருந்த வரிகள் தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே என்ற இரண்டு வரிகளை பெண்ணாவாள் அம்பற் சிலம்பி அரவிந்தத்தால் அணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு என்று எழுதி அந்தப் பாடலை பூர்த்தி செய்தார். இந்தப் பாடலை அவர் எழுதி முடித்த உடனேயே அந்தப் பெண் காலில் சிலம்பு அணியும் வகையிலான செல்வவதியானாள்.
இதிலிருந்து ஒளவையார் அந்தப்பெண்ணை இனிய சொற்களால் புகழ்ந்து பாடியதும் இனிய சொற்கள் எவ்வாறு நன்மை பயக்கின்றன என்றும் அறிந்து கொள்ளலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago