2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஹிந்தியும், மயான அமைதியும்

Editorial   / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலவந்தமாக திணிக்கப்படும் ஹிந்தி மொழியும், மயான அமைதியும்

 

தாய்மொழிக்கு அப்பால் எத்தனை மொழிகளை கற்றுக்கொண்டாலும் அது நல்லது, ஆனால் வேறுறொரு மொழியைக் கற்பவருக்கு அம்மொழி பிரயோசனமானதாய் இருக்கவேண்டும். இலங்கையில் பலரும் பல மொழிகளைக் கற்றுக்கொண்டுதான் இருக்கின்றனர்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்துடன் கல்வியை இடைநிறுத்திக்கொண்டவர்கள் அல்லது பாடசாலைகளில் இருந்து இடைவிலகியவர்களில் பலரும் வேறு மொழிகளைக் கற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு தொழில் நிமிர்த்தம் சென்றிருக்கின்றனர்.

எமது நாட்டின் அரச கரும மொழிகளான தமிழ், சிங்களம், இணை மொழியான ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அப்பால், கொரியன், ஜப்பான், பிரென்ஞ், உள்ளிட்ட தொழில் முறைக்குரிய மொழிகளையும் கற்றுக்கொண்டிருக்கின்றனர்.  

அவ்வாறான மொழிகளை கற்றுக்கொடுப்பதற்கு பல நிறுவனங்கள் அங்கிகாரம் பெற்றுக்கொண்டுள்ளன. அதேபோல, சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில்தான், ஹிந்தி மொழி கற்பிக்கப்படுவது ​தொடர்பில் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவை பொருத்தவரையில் பல மாகாணங்களில் ஹிந்தி மொழி பலவந்தமாக திணிக்கப்படுவதாகவும், ஹிந்தியை கற்றுக்கொள் மாட்டோம் என்றும் எதிர்ப்பு குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி திணிப்புக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.

எனினும், யாழ்ப்பாணத்தில் உள்ள  இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். இந்துக் கல்லூரியில் ஹிந்தி மொழி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஹிந்தி வகுப்புகள் ஆரம்பிக்கப்படுவது இது முதல் தடவையல்ல, ஹிந்தி தினத்தன்று, ​இலங்கை பொலிஸாருக்கு ஹிந்தி வகுப்புகள் இவ்வாண்டு ஜனவரி 11 ஆம் திகதியன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மொழியைக் கற்றல் என்பது தொழில் முறையின் ஊடாக வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும், பண்பாட்டுக்கும் வழிவகுக்க வேண்டும். வாழ்வியலோடு இரண்டறக் கலக்கவும் வேண்டும். தாயகமாக இந்தியாவிலேயே ஹிந்தி மொழியை ​பல மாநிலங்களைச் ​சேர்ந்த இந்திய பிரஜைகளே வெறுக்கின்றன நிலையில், யாழ்ப்பாணத்தில் ஹிந்தியை திணிப்பதற்கான காரணம் என்ன?

தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியாக குரல் கொடுக்கின்ற போதெல்லாம், வடக்கு, கிழக்கை, தமது மாநிலங்களில் ஒன்றாகவே மாற்ற முயற்சிக்கிறது என தென்னிலங்கையைச் சேர்ந்த இனவாதங்களைக் கக்குவோர் கொக்கரிப்பார்கள். அவர்களின் வாய்களுக்குத் தீணியை போடுவதாய், இந்த ஹிந்தி மொழியை கற்பித்தலும் அமைந்துவிடும்.

எமது நாட்டைப் பொறுத்தவரையில், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களில் பலருக்கு ஹிந்தி தெரியும். அவர்கள் தொழில் முறைக்காக அல்ல, திரைப்படங்களை பார்வையிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக கற்றுக்கொண்டனர்.

ஹிந்தி மொழி, பாடசாலைகளில் கற்பிக்கப்படுவது தொடர்பில், சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், அரசியல்வாதிகளோ, சமூகத்தின்பால் அக்கறைக் கொண்டவர்களோ இந்த ஹிந்திமொழி திணிப்பு தொடர்பில் காக்கும் மாயன அமைதியை களைந்து, சந்தேகங்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றோம். (20.08.2022)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X