2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

`வெற்றிலைக் கறையை அகற்றுவோம்’

A.Kanagaraj   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வெற்றிலை”, எமது நாட்டில் சிங்கள, தமிழ் கலாசாரங்களுடன் ஒன்றோடு ஒற்றிணைந்தது. வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன், மருத்துவக் குணங்களை ​அது கொண்டிருந்தாலும் உயிரைக் குடிக்கும் புற்றுநோய்க்கான மூலகாரணங்களில் மிக முக்கியமானதொன்றாக உள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கிணங்க, அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை குதப்புதல், விற்பனை செய்தல் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் அவ்வாறானதொரு சுற்றறிக்கை விடுக்கப்படாவிடினும், நிறுவனங்களுக்குள் வெற்றிலை குதப்புவதற்கு முகாமைத்துவம் இடமளிப்பதில்லை.

வெற்றிலை குதப்புதல் வாய்ப் புற்றுநோய்க்குப் பிரதான காரணமாக அமைகின்றது.  இலங்கையில் மட்டும், வருடத்துக்கு ஆகக் குறைந்தது 2,500 பேர், வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என ஆராய்ச்சியின் மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வாய்ப் புற்று​நோய்க்கு, வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு ஆகியவை பிரதான காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. வெற்றிலை குதப்புதல் பழக்க வழக்கமாக இருந்தாலும் அதற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டெழ முடியாத நிலைமை​​யே காணப்படுகின்றது. உடலுக்கு உற்சாகமூட்டும் ஒற்றாக வெற்றிலை குதப்புதலை சிலர் நினைக்கின்றனர்.

தூக்கம் விழித்துக் கடமையாற்றுபவர்கள், வெற்றிலை குதப்புவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர் அல்லது ​அடிமையாகிவிட்டனர். அவ்வாறானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதென்பது இலகுவில் இயலுமான காரியமல்ல.

தடை விதிப்பது, தனிநபரின் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிப்பதெனத் தர்க்கிக்க முடியும். எனினும், தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக வருகைதருகின்ற மக்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளும் போது, அது இடைஞ்சலாகும். அருவருக்கத்தக்கதாய் இருக்கும். ​அத்துடன், பணத்தைக் கொடுத்து நோயைக் கொள்வனவு செய்வதாகும்.

இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் வெற்றிலை பயன்பாட்டில் உள்ளதென, வெற்றி​லை குதப்புவதற்கு ஆதரவான தர்க்கங்கள் முன்வைக்கப்படலாம். அந்த நாடுகளில், வெற்றிலையுடன், பாக்கு, புகையிலை சேர்த்து குதப்புவதில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

முற்காலத்தில் அரசர்களும் ஒளடத சாற்றுக்காக வெற்றிலையை மென்றுள்ளனர். எனினும், இன்றைய வெற்றிலையின் தரம், ஒளடதமானதல்ல என்றொரு கருத்தும் உள்ளது. பாக்கு, புகையிலை இல்லாத வெற்றிலைப் பயன்பாட்டை ஆயுர்வேதத் திணைக்களம், ஏற்கெனவே அறிமுகப்படுத்தியிருந்தாலும், அது வெற்றியளிக்கவில்லை.

அலுவலக நேரங்களில்தான் ஆகக் கூடுதலாக வெற்றிலை குதப்பப்படுவதாக, புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான வீதியோரங்கள், ரயில், பஸ் நிலையங்கள், ​பொது மலசலகூடங்கள் உள்ளிட்டவற்றில், அவற்றை படம்பிடித்துக் காண்பிக்கலாம்.

வெற்றிலை குதப்புவதை முழுமையாகத் தடைசெய்ய முடியாது; சட்டமும் இல்லை. ஆகையால், மேற்படித் தடைத் தீர்மானம், காலந்தாழ்த்தியேனும் கொண்டுவரப்பட்டமைக்காக, வரவேற்க வேண்டும். அத்துடன், அது முழுவீச்சில் நடைமுறைப்படுத்த வேண்டும். (28.03.2019)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .