Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலுக்குப் பதிலாக வயிற்றில் புளியைக் கரைத்துவிடாதீர்கள்
மூவேளை என்பது குறைந்து குறைந்து வந்து, நேரங்கெட்ட நேரத்தில், ஏதாவது கிடைத்ததை வைத்து வயிற்றை நிரப்பிக்கொள்ளும் நிலைமையே பலரது வாழ்க்கையிலும் ஏற்பட்டுள்ளது. காலை உணவுக்குப் பதிலாக, ஒரு டீயைக் குடித்து பசியைப் போக்கிக்கொள்ளும் முறைமை இன்னுமே கடைப்பிடிக்கப்படுகின்றது.
பகலுணவும் இன்றி இரவு சாப்பாடும் இன்றி, இடைத்தட்டு நேரத்தில் ஒருவேளைக்கான உணவை உட்கொள்ளும் முறைமையொன்றை இன்னும் சிலர் கடைப்பிடிக்கின்றனர். நான்கு, ஐந்து கறிகளுடன் ஒருவேளைச் சாப்பாட்டை உண்டவர்களில் பலர், கறிகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டுள்ளனர்.
ஏதோவொரு வகையில் செலவைக் குறைக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. இதில், காலையில் ஒரு டீயுடன் வயிற்றை நிரப்பிக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகமென சொல்லத்தான் வேண்டும். அவ்வாறானவர்களின் வயிற்றிலும் புளியைக் கரைத்துவிட்டால் போல, பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா, ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை, நுகர்வோர் அதிகார சபையே கண்டறியவேண்டும்.
விலைகளை அதிகரிப்பதற்கு அதிகார சபை இடமளிக்காத போதெல்லாம், பொருள்கள் பதிக்கிவைக்கப்பட்டு, வேண்டுமென்றே தட்டுப்பாட்டை ஏற்படுத்தியமை கடந்தகால படிப்பினைகளாக இருக்கின்றன. ஆகையால், பால்மா விடயத்திலும் இவ்வாறானதொரு நிலைமையொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கக் கூடுமென்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. பால்மாவின் விலையை அதிகரிப்பதற்காக, நிறுவனங்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை, நுகர்வோர் அதிகார சபை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பால்மா விடயத்திலேனும் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, நுகர்வோரும் நிறுவனங்களும் பாதிப்படைந்துவிடக்கூடாது எனும் வகையில், உரிய தீர்வொன்றை எட்டுவது உடனடியான தேவையாக உள்ளது.
அதுமட்டுமன்றி, தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கு, புட்டிப்பாலும் ஊட்டப்படுகின்றது. பால்மாவுக்குத் தட்டுப்பாடு நிலவுமாயின், பால்குடியை மறவாத குழந்தைகளின் பசியைப் போக்குவது சிரமமான காரியமாகும். அத்துடன், ஊட்டச்சத்து கிடைப்பதும் குறைந்துவிடும்.
பால்மாவுக்குத்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே! ஆகையால், பசுப்பாலுக்குச் செல்வதே சிறந்த வழியாகுமெனப் பலரும் ஆலோசனைகளை வழங்கக்கூடும். நிறையுணவான பசுப்பால், நாட்டின் சகல பாகங்களிலும் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியே? அத்துடன், சூடாக்கிப் பருகும்போது இரண்டு வேளைகளுக்கு மேல் வைத்திருக்கவும் முடியாது. குளிர்சாதனப்பெட்டி வசதிகளின்றி இருப்போரின் நிலைமை, பெரும் திண்டாட்டமாகிவிடும். ஆகையால், காலத்தைக் கடத்திவிடாது, பால்மா பிரச்சினைக்கு அதிரடியான தீர்வைப் பெற்றுத்தரவேண்டும்.
பால்மா இறக்குமதியை நிறுத்தியமையால் இவ்வாறானதொரு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகின்றது. ஆக, ஏகபோக உரிமையைக் கொண்ட நிறுவனங்களின் செயற்பாடுகள், அடுத்த தலைமுறையை போஷாக்கற்ற உலகுக்கு இழுத்துச்சென்றுவிடும்.
மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் விலைகளை அதிகரிக்கக்கோருவது நியாயமானதல்ல. ஆயினும், செலவுகள் அதிகரிக்குமாயின் விலையை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழிகளே இல்லை. இரண்டும் ஒன்றிலொன்று தங்கியிருக்கிறது என்பதால், மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகிவிடக்கூடாது என்பதையே வலியுறுத்துகின்றோம். (02.08.2021)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
4 hours ago
6 hours ago