2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

வடிந்தோடும்போது அணைகட்டுவதில் என்ன பயன்?

Editorial   / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளம் வடிந்தோடும்போது அணைகட்டுவதில் என்ன பயன்?

என்னதான் நவீனத்துவ சிந்தனையில் மிதந்து கொண்டிருந்தாலும், சில பழமொழிகள், எக்காலத்துக்கும் பொருத்தமானவையாகவே அமைகின்றன. அதிலொன்றுதான், ‘வெள்ளம் வருமுன் அணைகட்ட வேண்டும்’ என்பதாகும்.

ஆனால், இந்த அரசாங்கத்தால் காலந்தாழ்த்தியேனும் எடுக்கப்படும் ஒருசில தீர்மானங்கள், நன்மை பயப்பனவாய் உள்ளன. சில தீர்மானங்கள், வெள்ளம் வடிந்தோடும் போது, அணை கட்டுவதைப் போல் அமைந்திருக்கின்றன. அதிலொன்றுதான், அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்மானமாகும். கொவிட்-19 நிதியத்துக்கு, அமைச்சர்கள் தங்களுடைய ஒருமாத சம்பளத்தை வழங்கவேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், ஆளும் தரப்பைச் சேர்ந்த சிலர், சம்பளத்தை வழங்கமுடியாதென அறிவித்துவிட்டனர்.

இதனால், அரச, தனியார் ஊழியர்கள் தப்பித்துக் கொண்டனர். இல்லையேல், ‘ஆளும் தரப்பினர் அர்ப்பணித்துவிட்டனர்; நீங்களும் அர்ப்பணிக்கவேண்டும்’ என, மேற்குறிப்பிட்ட தரப்பினரின் அடிவயிற்றில் கை வைக்கப்பட்டிருக்கும்.

அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், எம்.பிக்கான சம்பளம் மட்டுமே கோரப்பட்டிருந்தது. ஏனைய கொடுப்பனவுகளுடன் பார்க்குமிடத்து, எம்.பிக்காக சம்பளம் குறைவாகும். அதைக்கூட அர்ப்பணிக்க முடியாவிடின், மக்களிடத்தில் அர்ப்பணிக்க வேண்டுமென கேட்பதில் எவ்விதமான நியாயமும் இல்லை.

இதற்கிடையில், கொரோனா நிதியத்தின் கணக்குகளைக் கோரிநிற்கும் எதிரணியினர், தாங்களாகவே முடிவுகளை எடுத்து, கொரோனா தொற்றொழிப்புக்கு அர்ப்பணிக்கின்றனர்.

பொருளாதார ரீதியில், நாடு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக. அபிவிருத்தி, அரச நியமனங்களை நிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதனை, கொரோனா தொற்றின் ஆரம்பத்திலேயே செய்திருந்தால், தடுப்பூசி வழங்கலைத் துரிதப்படுத்தி இருக்கலாம்; மக்களுக்கும் நிவாரணங்களை வழங்கியிருக்கலாம்.

அதனூடாக, இன்னும் சில நாள்களுக்கு நாட்டை முழுமையாக முடக்கி, கொரோனா தொற்றை துடைத்தெறிந்திருக்கலாம். ஆக, வெள்ளம் வரும் முன்னர் அணைகட்டத் தவறிய அரசாங்கம், வௌ்ளம் வடிந்தோடிக் கொண்டிருக்கும் போது, அணை கட்டிக்கொண்டிருக்கிறது.

இதற்கப்பால், அநாவசியமான செலவுகளைக் கட்டுப்படுத்தலாம். ஓர் அமைச்சரின் பின்னால் செல்கின்ற வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்தால், இன்னும் செலவைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், அரச நியமனங்களை நிறுத்துவதன் ஊடாக, அரச வேலைகளுக்காக காத்திருப்போரின் வயிற்றில் அடித்துவிட்டது.

கொரோனாவுக்குப் பின்னர், புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படவில்லை. இதனால், பட்டதாரிகள் கூட வேலையற்ற பட்டதாரிகளாக இருக்கின்றனர். இந்நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இல்லையேல், இன்னும் இரண்டோர் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டி ஏற்படும்.

புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்குள் மூக்கை நுழைக்காது, ஏற்கெனவே முன்னெடுக்கப்படும் திட்டங்களை மேலதிக செலவுகளின்றி முன்னெடுக்க வேண்டும். இல்லையெனின், அத்துறையில் இருப்பவர்களும் வேலையின்றி இருக்கவேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்படும் என்பதை நினைவூட்டி, வெள்ளம் வரும் முன்னரே, அணையைக் கட்ட, எதிர்காலத்திலேனும் சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.    (02.09.2021)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .