Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
A.Kanagaraj / 2021 மார்ச் 14 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றை அடைவதற்காக நடத்தப்படும் போராட்டங்களை விடவும், கிடைத்ததை தக்கவைத்துக் கொள்வதற்கான சிரத்தையும் எடுக்கப்பட வேண்டும். இல்லையேல், இருப்பதுடன் இன்னும் சிலவற்றை சேர்த்தே அள்ளிக்கொண்டு சென்றுவிடும். இவையெல்லாம் கடந்தகாலப் படிப்பினைகளாகும்.
கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தோரை, கட்டாயமாக எரிக்கும் நிலைப்பாட்டை ஒரு வருடத்துக்குப் பின்னரே அரசாங்கம் மாற்றிக்கொண்டு, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.
அதுவரையிலும், சடலங்கள் கட்டாயமாக எரியூட்டப்பட்டன. தமது மதத்தின் பிரகாரம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைக் கோரி, முஸ்லிம்கள் பல்வேறான போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்தக் கோரிக்கைக்கான ஆதரவுக் குரலை, தமிழர்கள் தங்களுடைய போராட்டங்களில் இணைத்துக் கொண்டனர்.
‘தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்பதைப்போல, சிறுபான்மை இனங்களின் போராட்டங்களின் பயனாக, சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி, வழங்கப்பட்டது.
அவ்வாறான அனுமதி கிடைத்தாலும், சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை ஒதுக்கிக்கொள்வதில் பெரும் சிக்கல் நிலைமை ஏற்பட்டது. எனினும், தங்களுடைய சொந்த நிலங்களை முஸ்லிம்கள் பலர், ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காகக் கொடுத்துள்ளனர்.
அதன் பின்னரே, ஓட்டமாவடியில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அங்கு, சுமார் 181க்கும் மேற்பட்ட ஜனாஸாக்கள் இதுவரையிலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், “ஜனாஸாக்களுடன் வருபவர்கள், ஒத்துழைப்பு நல்காவிடின் ஓட்டமாவடி முடக்கப்படலாம்” என, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி, எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த எச்சரிக்கையை மிகக்கவனமாகப் பார்க்கவேண்டும்.
ஓட்டமாவடி முடக்கப்படுமாயின் ஜனாஸாக்களை அங்கு எடுத்துச்செல்ல முடியாது. வைத்தியசாலைகளின். சவச்சாலைகளிலேயே வைக்கவேண்டிவரும். நீண்டநாள்களாக வைக்கப்பட்டிருக்கும் கொவிட்-19 சடலங்களுக்கு எதிராக, யாராவது போராட்டங்களை நடத்துவார்களாயின், பலவந்தமாகத் தகனம் செய்யப்படலாம். இவையெல்லாம் கடந்தகால கசப்பான அனுபவங்களாகும்.
இல்லையேல், கொவிட்-19 சடலங்களை அடக்கம் செய்வதற்கு, வேறு இடங்களைத் தேடவேண்டிய நிலைமை ஏற்படும். இவையெல்லாம், ஆரம்பத்திலிருந்து புள்ளிவைக்கும் செயன்முறையாகவே அமையும். ஆகையால், போராட்டத்தின் பயனாகக் கிடைத்திருக்கும் அடக்கம் செய்வதற்கான உரிமையை, இல்லாமல் செய்யும் செயலாகவே அமைந்துவிடும்.
ஆகையால், ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக, அதிகளவிலானோர் செல்வது அவ்வளவுக்கு உசிதமானதல்ல; சுகாதார வழிகாட்டல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளதைத் போல, மிகநெருங்கிய உறவினர்கள் இரண்டொருவர் செல்வதே சாலவும் சிறந்ததாகும்.
இல்லையேல், புதிய சடலங்களில் இருக்கும் கொரோனா வைரஸ் கிருமிகள், தொற்றிக்கொண்டால், மையவாடி கொத்தணி உருவாகிவிட்டதாகக் கூப்பாடு போடத்தொடங்கிவிடுவர். அது, தங்களது தலைகளில் தாங்களாகவே மண்ணை வாரி போட்டுக்கொண்டதாகவே அமைந்துவிடும் என்பதால், மிக அவதானமாகச் செயற்பட வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
06 Apr 2025