2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

முயலும் கபடதன அறிவிப்பு

Editorial   / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிழ்க்கமுடியாத முடிச்சைப்போட முயலும் கபடதன அறிவிப்பு

போட்டியொன்று நடத்தப்பட்டால் மட்டுமே வெற்றி, தோல்வி கிடைக்கும். நடத்தாமலே இறுக்கமான முடிச்சொன்றை போட்டுவிட்டால், இல்லையேல் காலத்தை நீட்டித்துவிட்டால், மௌமாக காலத்தை கடத்திக்கொண்டே சென்றுவிடலாம். அவ்வாறானதொரு முடிச்சையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போடுவதற்கு முயலுகின்றார்.

முடிச்சு போடுவதில் ரணிலுக்கு நிகர் ரணில்தான். நல்லாட்சிக்காலத்தில் மாகாண சபைகளுக்கு போட்ட முடிச்சை அவிழ்க்கமுடியாது, மாகாண சபைகளுக்கான தேர்தல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கின்றது. இதற்கிடையில், உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கான அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க, தனது ஆட்சியில் மட்டுமன்றி, அவர் தலைமையிலான கட்சிக்குள்ளும் தேர்தலை நடத்தாது இழுத்தடித்துக்கொண்டே சென்றுவிடுவார். இதனிடையே உள்ளூராட்சி சபைகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகளாகும். இருக்கும் 341 உள்ளூராட்சி சபைகளுக்கு 2018ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட தேர்தலில் 8,690 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தச்  சபைகளுக்கு போதியளவில் வருமானமில்லை. உள்ளூர் வரி வருமானங்களும் குறைவு.

உறுப்பினர்களுக்கான செலவு உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான செலவுகளுக்காக மாகாண சபை, மத்திய அரசின் நிதியிலே தங்கியுள்ளன.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையிலும், எதிர்கால செலவுகளை கருத்தில் கொண்டும் ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம் வரவேற்கத்தக்கது. எனினும், சட்டத்திருத்தம் எவ்வளவு விரைவாக செய்யப்படும் என்பதற்கெல்லாம் எதிர்காலமே பதில்கூறும்.

2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தின் காரணமாகவே, உள்ளூராட்சி சபைகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 2011ஆம் நடத்தப்பட்ட தேர்தலின் ஊடாக மொத்தமாக 4,486 உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகினர்.

2018ஆம் ஆண்டு பெப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட்ட, உள்ளூராட்சி சபைகளுக்கான பதவிக் காலம்  2022 பெப்ரவரியுடன்    நிறைவடைந்தன. எனினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அப்பதவிக்காலத்தை 2023 மார்ச் 19 வரையிலும் நீடித்தார். அதனை இன்னும் நீடிக்கும் வகையிலான இழுத்தடிப்புகள் இடம்பெறுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

உள்ளூட்சி மன்றங்களின் உறுப்பினர்களே, மக்களின் நேரடியான பிரதிநிதிகளாவர். அதன்பின்னர் மாகாண சபை உறுப்பினர்கள் செயற்படுவர். அவர்களின் யோசனைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள், உயரிய சபைக்குக் கொண்டுச்செல்வர்.

இவ்வாறான நிலையில் ​உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கைகள் கட்டப்பட்டுவிடுமாயின் மக்களின் சாதாரண பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும்.

இல்லையேல், எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்துக்கொள்வதற்கு மத்திய அரசிலேயே தங்கியிருக்கும் நிலை, சாதாரண பொதுமகனுக்கு ஏற்படும் என்பதை நினைவில்​ கொள்க! (18.10.2022)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X