2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

முதுகெலும்புப் பலத்தை நிரூபித்துவிட்ட பொத்துவில்-பொலிகண்டி பேரணி

Editorial   / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதுகெலும்புப் பலத்தை நிரூபித்துவிட்ட பொத்துவில்-பொலிகண்டி பேரணி

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட அடக்கு முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழ்பேசும் மக்களுக்கு நீதி வேண்டியும், ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’  பேரணி வரலாற்றுப் பதிவாக மாற்றியுள்ளது.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸாரின் கடுமையான தடைகளைத் தகர்த்தெறிந்தும் ஆரம்பிக்கப்பட்ட பேரணியில், முஸ்லிம்களும் கைகோர்த்ததால், தமிழ் பேசும் மக்களின் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ‘இணைந்த கரங்கள்’, சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளின் போதெல்லாம், இறுகப்பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கில் எதேச்சதிகாரமாக முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், தமிழர்களின் நிலஅபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமலாக்கப்பட்டோர் விடயம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்தல் உள்ளிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவே, இப்பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

அரசியல் கொள்கைகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், பொதுவிவகாரங்களில் சிறுபான்மையினர் ஓரணியில் இருப்பதன் ஊடாக மட்டுமே, அரசாங்கத்துக்கு ஓரளவுக்கேனும் அழுத்தங்களைக் கொடுக்கமுடியும். வடக்கு, கிழக்கு ஓரணியில் நின்றாலும், அடுத்தபடியாக, சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் மலையகத்தில், ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ பேரணிக்கு ஆதரவளிக்கப்படவில்லை.

பேரணியில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாவிடினும், ஓர் அடையாளத்துக்காகவேனும் மலையகமெங்கும் கண்டனச் செயற்பாடுகளை முன்னெடுத்து இருக்கலாம். ஏனெனில், 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரிக்கையும் இப்பேரணியின் ஊடாக வலியுறுத்தப்படுகின்றது.

இந்நிலையில், 1,000 ரூபாயை வலியுறுத்தி, மலையகமெங்கும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இன்றையதினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கிலுள்ள அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அதற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து அறிக்கையை விடுத்துள்ளன.

ஆனால், ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ பேரணிக்கு, ஆதரவுக் கரம் நீட்டாததன் ஊடாக, மலையத் தலைமைகள் தங்களுடைய முதுகெலும்பின் பலத்தை, வெட்ட வெளிச்சம் போட்டுக் காண்பித்து விட்டனர். ஆகக்குறைந்தது, மலையகமெங்கும் சுவரொட்டிப் போராட்டத்தையேனும் முன்னெடுத்திருக்கலாம்.

வடக்கு, கிழக்கைப் போலவே, மலையத்திலும் பௌத்தமயமாக்கல் மிகச் சூட்சுமமாக முன்னெடுக்கப்படுகின்றது. விடிந்தெழுந்து பார்க்கையில், ஆங்காங்கே புத்தர் சிலைகள் முளைத்துவிடுகின்றன. நில உரித்துடைமை இன்மையால், பெருந்தோட்டங்களை அண்மித்திருக்கும் கிராமங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர், தேயிலைக் காணிகளை அபகரித்து கிராமங்களாக்கிக் கொள்கின்றனர்.

ஆளும் கட்சியில் இருந்தாலென்ன, எதிரணியில் இருந்தாலென்ன, சிறுபான்மை இனங்களுக்குத் தீங்கிழைக்கும் போதெல்லாம், ஓரணியில் நின்றால் மட்டுமே, தட்டிக்கேட்க முடியும். அரசியல் இருப்புக்காக, மக்களைப் பகடைக்காய்களாக முன்வைத்துத் திட்டமிடும் போராட்டங்கள் வெற்றியளிக்காது.

ஆனால், முதல்நாளே, பேரழுத்தத்தைக் கொடுத்திருக்கும் ‘பொத்துவில்- பொலிகண்டி பேரணி’ வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். (05.02.2021)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X