2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டலாமா?

Editorial   / 2024 பெப்ரவரி 02 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு தேர்தல் ஆண்டாக இருப்பதால், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய தொகுதிகளுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். இன்னும் சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஏற்கெனவே தங்களுடைய பயணத்தை ஆரம்பித்துவிட்டனர். ஒருசில கருத்து கணிப்பின் பிரகாரம், பிரதான கட்சிகளின் தேர்தல் வெற்றி சற்று தூரமாகவே இருகின்றது.

பாராளுமன்றத்தின் ஒன்பதாவது கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 7ஆம் திகதியன்று ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் புதியக் கூட்டத்தொடர் ஆரம்பித்துவைக்கப்படும். செயலிழந்து இருக்கும் குழுக்களுக்கு அதன்பின்னர் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இது சம்பிரதாயமாகும்.

எனினும், தற்போதைய அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் தலைவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தலைவரை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு திராணியற்றிருக்கும் அரசாங்கம், கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளது என எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலா? அல்லது பொதுத் தேர்தலா? முதல் நடக்கும் என்பதில் ஒரு ​தெளிவற்ற நிலைமையே காணப்படுகின்றது. எனினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்களை அரசியல் கட்சிகள் அறிவித்துவிட்டன. இன்னும் சில கட்சிகள் மௌனத்தை கடைப்பிடிக்கின்றனர்.

இதேவேளை, வடக்கு கிழக்கை மையமாகக் கொண்டு தமிழ் வேட்பாளரை பொது வேட்பாளராக நியமிக்கவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அக்கோரிக்கைக்கு சார்பான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. விமர்சனங்களுக்கும் குறைவில்லை. எனினும், தமிழர்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் என்பதில் ஐயமில்லை.

இது ஒருபுறமிருக்க, அடுத்த ஜனாதிபதி தேர்தலில், மலையக மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டுமென முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி கூறியிருக்கின்றார். யாருக்கும், எவ்வாறான கருத்துகளையும் கூறும் உரிமையுண்டு. அதனை மறுக்கவில்லை. எனினும், யாதார்த்தமாக இருக்கவேண்டும் என்பதே எங்களுடைய அவதானிப்பாகும்.

மலையகத்தை அடையாளமாகக் கொண்ட கட்சிகள்,தொழிற்சங்களுக்கு இடையில் ஓர் ஒற்றுமை இல்லை என்பது, கடந்தகால நாடகங்களின் போது அம்பலமானது. ஆகக் குறைந்தது ‘மலையகம்-200’ நிகழ்வினையாவது ஒரு குடையின் கீழிந்து செய்திருந்தால், ஒரு திருப்தியாக இருந்திருக்கும் அந்த நிகழ்வையும் தங்களுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கான தனித்தனியாக செய்தனர்.

பொதுவான விடயங்கள் கட்சி, அரசியல், தொழிற்சங்க பேதங்களை விட்டுவிட்டு ஓரணியில் திரண்டிருக்கலாம். எனினும், அந்த சிந்தனை மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களிடம் இல்லை என்பது கடந்தகால நிகழ்வின் போது அம்பலமானது. இந்நிலையில், மலையக மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டதை போலவே இருக்கும்.

இந்த பழமொழிக்கு பல அர்த்தங்கள் இருந்தாலும், மலையக அரசியலில் ஓர் ஒற்றுமை இல்லாத நிலையில், மலையகத்தில் இருந்து பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமில்லாத ஒரு செயலாகும் என்பதே எங்களுடைய அவதானிப்பாகும்.  29.12.2023


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .