Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 31 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னிப்புக்காகக் காவடி தூக்கும் அள்ளக்கைகள்
கூட்டத்தோடு ‘கோவிந்தா’ போட்டுவிட்டு, விளங்கப்படுத்த முடியாது விழிபிதுங்கி நிற்போரில், தற்காலத் தமிழ்த் தலைவர்கள் சிலரை உதாரண புருஷர்களாகக் கூறலாம். எதற்காகக் கையொப்பமிட்டீர்கள், ஏன் கைகளை உயர்த்தினீர்கள் எனக் கேட்டுவிட்டால், மழுப்பி மெழுகி, நழுவியும் விடுகின்றனர்.
மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டுமென்ற மகஜரில், எதிரணியிலிருக்கும் தமிழ்த் தலைவர்கள் சிலரும், கையொப்பமிட்டுள்ளனர் எனும் செய்தியானது அவ்வளவுக்கா, அரசியல் திராணியற்றவர்களாக இருக்கின்றனரெனக் கேட்கத் தோன்றுகிறது.
‘ஜனாதிபதியின் பொது மன்னிப்பு’, இந்நாட்டில், மிகத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட, தவறாகப் பயன்படுத்தப்படும் அதிகாரங்களில் ஒன்றாகும். பொது மன்னிப்புக்கான அளவுகோல்களுக்கு வரையறை இன்மையால், உயர்நீதிமன்றத்தாலும் இறுதிசெய்யப்படும் மேன்முறையீடுகளுக்கு அப்பாற்சென்று, பொதுமன்னிப்புகள் வழங்கப்படுகின்றன.
நிறைவேற்று அதிகாரத்தை அடிமுதல் நுனிவரையிலும் அனுபவிக்கும் வரப்பிரசாதம் கிடைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளியான கோணவல சுனிலுக்குப் பொதுமன்னிப்பளித்து, அவரை அகில இலங்கை சமாதான நீதவானாகவும் ஆக்கிவிட்டார்.
அவருக்குப் பின்னர் இருந்த ஜனாதிபதிகள், புதிய புதிய அர்த்தங்களைக் கற்பித்து, பொதுமன்னிப்பு வழங்கினர். தற்போதைய ஜனாதிபதியும், மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளித்து அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார்.
இந்த நாடகம் இங்குமட்டுமல்ல, அமெரிக்காவிலும் அரங்கேற்றப்படுகிறது. நீதிமன்றங்களால் குற்றவாளிகளென இனங்காணப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரப், பொது மன்னிப்பளித்துள்ளார். அதிலும் இறுதியாக, 2019இல் பொது மன்னிப்பளிக்கப்பட்டவர் பிரபல்யம் இல்லாத, அவருக்கு வேண்டப்பட்டவர்.
தீர்மானமெடுக்கும் ஜனாதிபதியைப் பழிசொல்வதற்கு மக்களுக்கு இருக்கும் சந்தர்ப்பம் இங்கு குழப்பமூட்டுவதாகவே உள்ளது. வலுவான கோரிக்கை விடுக்கப்படும்போது, அவற்றை ஆராய்வதற்கு ஜனாதிபதி கட்டுப்பட்டவர்.
தர்க்கத்தைப் பார்த்தால், படுகொலை செய்யப்பட்டவர்களும் குற்றவாளிகளாக நீதிமன்றங்களால் இனங்காணப்பட்டவர்களும் பிரபல்யமானவர்களாகவே இருக்கவேண்டும். இல்லையேல், பொதுமன்னிப்புக்கே இடமில்லை. நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தாமலே, விடுதலைக்காக ஏங்கிக்கிடக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு என்பது, கோமாவுக்குள் சிக்கியிருக்கிறது.
கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பிள்ளைகள் இருவர், ‘ஜனாதிபதி மாமா’வுக்கு என விளித்து “அம்மா இறந்தபின் ஆதரவற்றுள்ளோம்; அப்பாவுக்குப் பொது மன்னிப்பு வழங்குங்கள்” என்ற கடிதத்துக்கேனும் கையொப்பமிட, அள்ளக்கை தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுத்திருக்கலாம்.
அரசியல்வாதிகளுக்கும் மனிதாபிமானம் இருக்கிறதென்பதில் மாற்றுக்கருத்தில்லை; ஆனால், அப்பாவி மக்களிடத்திலும் அதைக் காண்பிக்க வேண்டும்.
சமூகத்தில் பிரபல்யமானவர்கள், உதாரண புருஷர்களாகவே இருக்கவேண்டும். கொலை, பாலியல் குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பளித்தால், அதுவே தவறான அர்த்தத்தைக் கற்பித்துவிடும். நிறைவேற்று அதிகாரத்துக்கு அர்த்தம் கற்பிக்கமுடியாது என்பதால், பொதுமன்னிப்பு என்பதற்கப்பால் ‘கடூரம்’ குறைந்த தண்டனையை விதிக்கலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
20 minute ago