Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஜூலை 25 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் தொற்றுப் பரவலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் முறைமைக்குப் பதிலாக, எரித்துவிட வேண்டும் எனும் முறைமையை அக்காலத்தில் ஆட்சியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பின்பற்றியிருந்தது.
முஸ்லிம்களின் நம்பிக்கையையும் மீறி, அவர்களின் உரிமைகளைப் பறித்து, கொவிட் தொற்றினால் உயிரிழந்த சுமார் 276 பேரின் உடல்கள் இவ்வாறு தீயில் எரிக்கப்பட்டன.
இதற்கு அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார, மருத்துவ பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டுதல்களை அரசாங்கம் காரணம் காண்பித்திருந்தது.
புதைக்கப்படும் உடல்களிலிருந்து கொவிட் வைரஸ் வெளியேறி, நீரோடைகள், நீரூற்றுகளில் கலந்து, அதனால் தொற்று மேலும் பரவும் எனவும் காரணம் கூறப்பட்டிருந்தது.
2021 ஜூலை மாதம் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆதரவில், அக்காலத்தில் பொறுப்பில் இருந்த நீர் வழங்கல் அமைச்சினால், கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நீரோடைகளில் கொவிட்-19 பரப்பும் கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகின்றதா என்பது தொடர்பான பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆற்று நீர், மருத்துவமனைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் இதர தொற்றுப் பரவலுக்கு ஏதுவான பகுதிகள் போன்றவற்றின் மேற்பரப்பில் இந்த கொரோனா வைரஸ் இல்லை என்பது இந்த பரிசோதனையின் போது தெரியவந்தது.
இந்நிலையில், குறித்தவொரு சமூகத்தைப் பழிவாங்கும் அடிப்படையில் இவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவிய நிலையில், தற்போது அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் காலப்பகுதியில், காலம் கடந்த ஞானம் பிறந்துள்ளதைப் போன்று, இவ்வாறானதொரு தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளமை, இதுவும் தேர்தலில் வாக்குகளைத் தேடும் ஒரு பிரச்சார நடவடிக்கை தானா என சிந்திக்க வைத்துள்ளது.
அத்துடன், ஒரு இனத்தின், மதத்தின் நம்பிக்கையை மீறி, உயிரிழந்த உடல்களைத் தகனம் செய்வது என்பது, அந்த மதத்தின் கொள்கைகளை நிந்தித்து அவமதிக்கும் செயலாகும்.
நாட்டில் பெரும்பான்மையினர் பின்பற்றும் பௌத்த மதம் சார்ந்த ஏதேனும் கொள்கை இவ்வாறு மீறப்பட்டு, இது போன்றதொரு அசாதாரணமான தீர்மானம் அக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்தால், வெறுமனே மன்னிப்புக் கேட்டுவிட்டு எல்லாம் முடிந்தது என்று சென்றுவிடுவார்களா? இதற்குப் பொறுப்பாக இருந்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவது? இந்தத் தீர்மானமும் ஒரு மதத்தை அவமதிக்கும் செயலாகவே அமைந்துள்ளது.
பெரும்பான்மையினருக்கு ஒரு நீதி, ஏனையவர்களுக்கு ஒரு நீதியா? ஒரு நாடு, ஒரு சட்டம் என்பது இங்குப் பொருந்தாதா? பொறுமைக்கும் எல்லை உண்டு. தவறு செய்வது மனித இயல்பு, அந்தத் தவறை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்வது அதே மனிதனின் உயர்ந்த பண்பு.
மன்னிப்புக் கேட்பது அதற்கும் மேலான செயல். பாதிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மன்னிப்புக் கோரலை ஏற்று, மன்னிப்பார்களா?
25.07.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago