Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஒக்டோபர் 15 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத விழுமியங்களைக் கற்றுக்கொடுத்தல் மனக்கசப்புகளுக்கு வித்திடாது
நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதிலும் கடைப்பிடிப்பதிலும் ஆகக்கூடிய பங்கு பொலிஸாருக்கே உள்ளது. ஆனால், சிற்சில சம்பவங்களைப் பார்க்குமிடத்து, போதியளவு பயிற்சி வழங்கப்படவில்லை என்றே எண்ணத் தோற்றுகின்றது.
பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில், சகல இனங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறான மொழிகளைப் பேசுவர்; மதங்களைப் பின்பற்றுவர்; பல வழிபாட்டு முறைமைகளைப் பின்தொடர்வர். இவை தொடர்பில், பொலிஸாருக்கு அறிவுரைகளை வழங்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பொலிஸ் நிலையங்களில், தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சந்தேகநபர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியமை, சந்தேகநபர்களை மரணிக்கச் செய்தல், பெண்கள் அல்லது சிறுமிகளை துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தல், பாலியல் ரீதியாகச் சீண்டுதல் உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம். இதனால், சட்டம், ஒழுங்கை அமல்படுத்தும் பொலிஸார் மீதான நம்பிக்கைகள், ஆங்காங்கே சந்தேகத்தைத் தோற்றுவித்திருந்தன.
ஆனால், காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி, மத நியதிகளை மீறி, வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில்களுக்குள், பாதணியை கழற்றாமல் திரிந்துள்ளமை, முகம்சுளிக்கச் செய்துள்ளது.
வேண்டுமென்றே இவ்வாறு கோவில்களுக்குள் சென்றாரா? அல்லது கோவில் நிர்வாகங்கள் அறிவுறுத்தியும் அதனைச் செவிகளில் போட்டுக் கொள்ளவில்லையா, என்பதெற்கெல்லாம் விசாரணைகளின் பின்னரே விடைகிடைக்கும். உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா, என்பதெற்கெல்லாம் காலமே பதில் சொல்லும்.
சட்டம், ஒழுங்கைப் பின்பற்றவேண்டிய ஒரு பொறுப்புமிக்க அதிகாரத்தில் இருக்கும் பொறுப்பதிகாரி, கோவிலுக்குள் நுழையும் போது, எவ்வாறு செல்லவேண்டும் என்பது தொடர்பில் தெரிந்திராமல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆகையால், வேண்டுமென்றுதான் சென்றிருக்கிறார் என்பதே யூகமாகும்.
நாட்டு மக்களிடத்தில் ஒற்றுமையைப் பேணவேண்டுமாயின், சட்டம், ஒழுங்கு சரியாகவும் எவ்விதமான பாரபட்சமும் இன்றி, அச்சொட்டாகப் பின்பற்றவேண்டும். ஓர் அதிகாரியே இவ்வாறு தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டார் என்றால், அவருக்குக் கீழிருக்கும் சாதாரண பொலிஸார், எவ்வாறு நடந்துகொள்வார்கள்?
எந்தத் துறைகளைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், அதிகாரத்தில் இருப்போர், முன்மாதிரியாக நடந்துகொள்ளவேண்டும். தனக்குக் கீழிருப்பவர்களுக்கு சரியானதை வழிகாட்டவேண்டும். இல்லையேல், ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையிலும்’ என்பதுபோல, ஏனையோருக்கும் தொற்றிக்கொள்ளும்.
இவ்வாறான மத நிந்திப்புகள், மனக்கசப்புகளுக்கு வித்திட்டுவிடும். அதுவே, ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள், பிற மதங்கள் சார்ந்த விழுமியங்களைப் பின்பற்றக்கூடாது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமே இல்லை.
நாட்டில் சட்டமும் ஒழுங்கும் ஒழுங்காக இருக்குமாயின், அநேக பிரச்சினைகள் தோன்றம் பெற்றிருக்காது. சிலரின் அதி திமிர்த்தனத்துடனான நடத்தை, இனங்களுக்கு இடையில் விரிசலையும் மனக்கசப்புகளையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
4 hours ago
5 hours ago