2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

மீட்கப்படும் பழைய கொலைகள் தீர்வின்றியே மூடப்படுமா?

Janu   / 2025 பெப்ரவரி 09 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீட்கப்படும் பழைய கொலைகள் தீர்வின்றியே மூடப்படுமா?

நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர்களில் ஊடகவிலயலாளர் லசந்த விக்ரமதுங்க, ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதின், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை போன்றன ராஜபக்சர்கள் தவிர்ந்த பிரதொரு தரப்பு ஆட்சிபீடம் ஏறிய போது பரவலாக பேசப்பட்டன. கிடப்பில் இடப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் முடக்கிவிடப்பட்டு, பரவலாக பேசப்பட்டன. தற்போதைய திசைகாட்டி அரசாங்கத்தினாலும் இந்த கொலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றன.

அதுபோன்றே, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலும் தற்போதைய அரசாங்கத்தினால் பல விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய முக்கியமான ஆவணங்களை மறைத்தவர்கள் அல்லது சிதைத்தவர்கள், கொலைக்கு உடைந்தையாக இருந்தவர்கள் என சந்தேகிக்கத்தில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று பேரை விடுவிக்குமாறு சட்டமா அதிபரினால், குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளமை தொடர்பில் பரவலாக பேசப்படுவதுடன், சமூக ஆர்வலர்கள், சிவில் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ளது.

லசந்தவின் கொலை தொடர்பான முறையான விசாரணைகள் 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதாவது, கொலை நடைபெற்று சுமார் ஆறு ஆண்டுகள் கழிந்த பின்னரே முறையான ஆழமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து குறித்த மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போது குறித்த மூன்று சந்தேக நபர்களுக்கும் எதிரான சட்ட ரீதியாக எவ்விதமான நடவடிக்கைகளும் தொடரப்படமாட்டாது, அவர்களை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளமை சட்டமா அதிபர் ஏதேனும் அரசியல் பின்னணியில் இவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளாரா அல்லது ஏதேனும் அரசியல் தலைமையை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளாரா என்பது போன்ற சந்தேகங்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போதைய சட்டமா அதிபர் நியமனம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டதாக அமைந்துள்ளது.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான பொறுப்பு புதிய குழுவினரிடம் ஜனவரி 15ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, ஜனவரி 27ஆம் திகதி சட்டமா அதிபரினால் மேற்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த விசாரணைக் குழுவின் விசாரணைகளில் ஏதேனும் புதிய விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதனால் இந்த தீர்மானத்தை சட்டமா அதிபர் மேற்கொண்டாரா என்ற ஒரு சந்தேகமும் இல்லாமல் இல்லை.

எவ்வாறாயினும், ராஜபக்சர்கள் தவிர்த்து இதர தரப்பினர் நாட்டில் ஆட்சி செய்யும் போது, ராஜபக்சர்கள் ஆட்சி புரிந்த காலப்பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆரம்பத்தில் ஆரவாரமாக விசாரணைகள் ஆரம்பமாகி, காலப்போக்கில் அவை சத்தமின்றி அடங்கிப்போவதை கடந்த காலங்களில் கண்டுற்ற நிலையில், இந்த விசாரணைகளும் அவ்வாறே மூடப்பட்டுவிடுமா? 

06.02.2025


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .