Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறக்க ‘இன்பச் சுற்றுலா’ செல்லுங்கள்
உலகம் முழுவதும் சுற்றிவரவேண்டும் என்றோர் ஆசை, யாரிடம்தான் இருக்காது. ஆனால், வீட்டைவிட்டே வெளியேறமுடியாத நிலைமையொன்று ஏற்பட்டு, ஒவ்வொருவரிடத்திலும் அழுத்தமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாகப் பலரும் தங்களைத் தாங்களாகவே விடுவித்துக்கொண்டனர்.
கொரோனாவுக்குப் பின்னர், ஒவ்வொரு நாடும் பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அபிவிருந்தி அடைந்துவரும் நாடுகளின் நிலைமை மோசமாகிவிட்டது. அந்நியசெலாவணியை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை, முற்றுமுழுதாக ஸ்தம்பிதமடைந்துவிட்டது. சில நாடுகளில் வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன.
நமது நாட்டை பொறுத்தவரையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறான செயற்றிட்டங்கள், காலவோட்டத்துக்கு ஏற்றவகையில் முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனாக் காலத்தில், முடங்கியே இருக்கவேண்டும் என்பதால், தத்தமது வீடுகளுக்குள், வீட்டுவளவுக்குள்ளே சுற்றிவரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
உலக சுற்றுலா தினமாக செப்டெம்பர் 27ஆம் திகதியை ஐ.நா சபை, 1970 ஆம் ஆண்டு அங்கிகரித்து, ஒரு தசாப்தத்துக்குப் பின்னர் 1980 முதல், உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது. போக்குவரத்து, தங்குமிடம், வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கியதே சுற்றுலாத்துறை. இதனூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
கொரோனாவால், சுற்றுலாவுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அபிவிருத்தியடைந்த நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வோர் புதிய அனுபவங்களையும் சிந்தனைகளையும் பெறுகின்றனர். இங்கிருந்து செல்வோர், அதேபோன்ற அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இல்லாதவர்கள் எனச் சொல்லப்படுபவர்கள், கோவில்கள், சுற்றுலாத்தளங்கள், கடற்கரையோரங்கள், வனாந்தரங்கள், தலங்கள் என உள்ளூரிலேயே சுற்றுலாச் செய்து, புதுப்புது அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். சுற்றுலா செல்வது, அழுத்தமான உணர்வுகளிலிருந்து விடுப்பதற்கான சிறந்த முறையாகும்.
நமது நாடும் திறக்கப்பட்டுவிட்டால், சுற்றுலாத்துறையில் இருப்போர், மனமகிழ்ச்சி அடைவர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் “இலங்கையின் அழகை ரசிக்கும் ஆத்மார்த்த அனுபவத்தைப் பருக வாருங்கள்” என, உலக சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
நாட்டை முழுமையாகத் திறப்பதா, கட்டுப்பாடுகளுடன் திறப்பதா என்பது தொடர்பில், உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை. எனினும், பொருளாதாரத்தைக் கவனத்தில் கொண்டு, திறக்கப்படவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது. மக்களும் அதே சிக்கலுக்குள்ளேயே சிக்கியுள்ளனர்.
இந்தச் சிக்கல்கள் அவிழ்க்கப்பட வேண்டும். அதற்கு, ஒவ்வொருவரும் மிகவிழிப்பாகச் செயற்பட வேண்டும். வீடுகளுக்குள்ளே முடங்கிக்கிடப்போர், வெளியே வந்து மன அழுத்தமான உணர்வுகளிலிருந்து விடுபட்டு, சிறகடித்துப் பறக்கவே வேண்டும்.
மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறக்க வேண்டுமாயின், ‘இன்பச் சுற்றுலா’ செல்லுங்கள்; வாழ்க்கையை இரசித்து வாழுங்கள்; அதிலிருந்து புத்துணர்ச்சி பெறுங்கள். ஆனாலும், சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாகப் பின்பற்றுவதிலிருந்து, சற்றும் விலகிவிடாதீர்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
5 hours ago