Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நொடிப்பொழுதில் அழுத்தும் பொத்தானுக்குள் சிக்கும் 5 ஆண்டுகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும். அங்கு மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் திருவிழா நடந்தே தீரும். அதில், ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் மிகக்கூர்மையான ஆயுதமே வாக்குரிமையாகும்.
தமிழகத்தில் 16ஆவது சட்டமன்றத்துக்கான தேர்தல் சூறாவளி பிரசாரம் தணிந்து, வாக்களிப்புகள் ஒரேகட்டமாக நேற்று (06) ஆரம்பமாகின. ஏனைய மாநில ஆட்சிகளை விட, தமிழகத்தில் ஆட்சியமைக்கப்போவது எக்கட்சி என்பதை இலங்கையும் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கைக்கும் இந்தியா மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலான ‘பெரியண்ணா’ உறவுக்கு தமிழக ஆட்சி, மிகமுக்கியமானதாக அமைந்திருந்தது என்பது, கடந்தகால படிப்பினையாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இம்முறை தேர்தலில் ஐந்து முனைப்போட்டிகளே உள்ளன.
கூட்டணியாக, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க), திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க), மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - தேசிய முற்போக்கு திராவிட கழகம் (அ.ம.மு.க - தே.மு.தி.க) ஆகியனவும் நாம் தமிழர் கட்சி தனியாகவும் களத்தில் நிற்கின்றன. இதில், அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிகளுக்கு இடையிலேயே கடும் போட்டிகள் நிலவுகின்றனவென இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் ஆளுமைமிக்க தலைவர்களாகத் திகழ்ந்த, முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் நடைபெறும் முதலாவது சட்டமன்ற தேர்தல் இதுவாகும். அதேபோல, மு.க ஸ்டாலின் தி.மு.க தலைவராகவும் முதலமைச்சராக எட்டப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றதன் பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தலும் ஆகும்.
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்திருந்த நிலையிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பிலான பிரேரணை கொண்டுவரப்பட்டது. அப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகள் கோரியிருந்தன. எனினும், மோடியின் தலைமையிலான அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடுநிலைவகித்தது.
இதேவேளை, தமிழக மீனவர்கள் எல்லைமீறும் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை, தமிழக-இலங்கை அரசாங்க பிரதிநிதிகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட மீன்பிடி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் இடைநடுவிலேயே நின்றுவிட்டன. ஆனால், அத்துமீறல்களும் கைதுகளும் பெறுமதிமிக்க மீன்பிடி உபகரணங்களைத் துவம்சம் செய்வதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இத்தேர்தலில், அவையும் ஓரளவுக்குத் தாக்கத்தைச் செலுத்தும் என்பதிலும் ஐயப்பாடு இல்லை. எனினும், வெற்றிதான், அடுத்த ஐந்தாண்டுக்கு அரசியல் அந்தஸ்தை உயர்த்தி நிற்கும்.
நமது நாட்டைப் போன்றல்லாது வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஊடாகவே வாக்களிக்க வேண்டும். ஜனநாயகத்தின் மிகப்பெரிய வரப்பிரசாதம் வாக்களிப்பாகும். அது, இந்தியாவில் பொத்தானுக்குள்தான் உள்ளது. அப்பொத்தானுக்குள்தான் அடுத்த ஐந்தாண்டுகள் ஆட்சி ஒளிந்திருக்கிறது. ஒருநொடி முடிவிலேயே அதுவும் இருக்கிறது. (07.04.2021).
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago