2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

பெற்றோர்களே இன்னுமின்னும் விழிப்பாகவே இருக்கவேண்டும்

Mayu   / 2024 பெப்ரவரி 19 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாரிடமாவது பேச்சை கொடுத்தால், வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் வேலைக்கு போனால் போதாது, வீட்டில் இருக்கும் நாயும் வேலைக்குப் போகவேண்டுமெனக் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்போம். பொருளாதார நிலைமை அந்தளவுக்கு மோசமாகிக் கொண்டிருக்கின்றது.

வர்த்தகத்தில் ஈடுபடும் பலரும், அதிக விலைக்கு விற்றல், தரமற்ற பொருட்களை விற்றல், கலப்படம், பதுக்கி வைத்திருந்து விற்றல், இப்படியெல்லாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவற்றுக்கிடையில், நாட்டில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களுக்குக் குறைவே இல்லை எனலாம். மேலும், போதைப்பொருள் பயன்படுத்துவோரின் அட்டகாசத்துக்குக் குறைவே இல்லை.

‘யுக்திய’ நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையவில்லை. வகைப்படுத்தப்பட்டிருக்கும் போதைப்பொருளுகளுக்கு அப்பால், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகம் மிக சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒருவகையான ஸ்டிக்கர், டொபி போன்ற இனிப்பு பண்டம், பேனாக்கள் ஆகியவற்றின் ஊடாகவே போதைப்பொருள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு தங்களுடைய பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர், மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும். தலைமன்னார் வடக்கு பகுதியில் 10 வயதான சிறுமியொருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

அந்தக் குற்றச்செயலைப் புரிந்தவர், அச்சிறுமியின் பாட்டியிடம் சாப்பாடு வாங்கி சாப்பிடுபவர் என்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆக, போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், எவ்வாறான குற்றங்களையும் புரியக் கூடியவர்கள் என்பதை நினைவில் கொள்க.

இதனிடையே இப்பாகமுவ கல்வி வலயத்திலுள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்கள் நால்வர், மரமொற்றுக்கு கீழ், விழுந்துகிடந்த நிலையில் மீட்கப்பட்டு, குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், ஒருவரின் நிலைமை ஆபத்தானது என்றும் நால்வரும் போதைப்பொருள் பாவித்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நால்வரில் ஒருவருடைய தந்தை போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்பது விசாரணைகளின் மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பாடசாலை பருவத்தில் எதனையும் சோதித்துப் பார்க்கும் ஆர்வம் மாணவர்களிடத்தில் இருக்கும், இதன் காரணமாக, போதைப்பொருள் என்று தெரியாமல் அந்த மாணவர்கள் பயன்படுத்தி இருக்கக்கூடும்.

பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள், யார், எதனைக் கொடுத்தாலும் வாங்கவோ, வாங்கி உண்ணவோ, நுகரவோ வேண்டாமென அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல, வித்தியாசமான, தங்களுக்கு பரீட்சயமில்லாத பொருட்களை, கண்டால் எடுக்கவே வேண்டாமென கூறவேண்டும்.

அத்துடன், தங்களுடைய பிள்ளைகளின் நண்பர்கள் யார், அந்த நண்பர்களின் வட்டம் எப்படியாவது என்பதை அறிந்துவைத்துக்கொள்ளவேண்டும். தங்களுடைய பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டுமாயின், விழிப்பாக இருப்பதே சிறந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X