2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

‘பெரியண்ணா’வின் குழந்தையை தீயிட்டு கொளுத்திய பிக்குகள்

Editorial   / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘பெரியண்ணா’வின் குழந்தையை தீயிட்டு கொளுத்திய பிக்குகள்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை பெப்ரவரி எட்டாம் திகதியன்று ஆரம்பித்துவைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “நீங்கள் உங்களுக்கே விளக்காக இருங்கள்” எனும் புத்தரின் போதனையைக் கூறி, உரையை நிறைவு செய்தார்.

ஜனாதிபதியின் உரை, நிறைவடைவதற்கு முன்னரே பாராளுமன்ற வளாகத்தில், பாரிய தீப்பிழம்பு கிளம்பி, தமிழ் மக்களின் மனங்களை கருமையாக்கிவிட்டது. இதனால், சிறுபான்மையின மக்களிடமிருந்த இந்த அரசாங்கத்தின் மீதான, அன்றேல் 13 மீதான கொஞ்ச நம்பிக்கையும் தகர்த்தெறியப்பட்டுவிட்டது.

பொருளாதார நெருக்கடியின் போது ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிலைமை மாறி, புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டமைக்கு எதிராக, பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கிலிருந்து கிழக்கை நோக்கிய ‘சுதந்திர தின கரிநாள் பேரணி’ மட்டக்களப்பில் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடிக்காத நிலையில், தமிழ், முஸ்லிம்கள் தங்களிடம் கையேந்த வேண்டும் என்ற பேச்சு சூடுபிடித்துள்ளது. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்துக்கு எதிராகப் பலரும் கொக்கரிக்கத் தொடங்கிவிட்டனர்.

 பெருந்திரளான பிக்குகள் ஒன்றுகூடி, பாராளுமன்ற வளாகத்தில் முன்னெடுத்த எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னர், 13ஆவது திருத்தத்தை தீயிட்டுக் கொளுத்திவிட்டனர். அவர்கள், கடதாசிகளைக் கொளுத்தினர் என்பதை விடவும், இந்நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்பை கொளுத்தி சட்டத்தை மீறிவிட்டனர். இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியது உரிய தரப்பினரின் பொறுப்பாகும்.

எண்ணங்கள்  மனதிலிருந்து உண்டாகின்றன. அவைகளுக்கு மனதே முதன்மையானது. பிக்குகளின் எண்ணங்கள் கூட, இந்நாட்டில் சிறுபான்மை இனங்களாக வாழ்வோருக்கு எதிரானவையாக இருக்கின்றன என்பதை நேற்றைய சம்பவம் படம்பிடித்துக் காட்டுக்கின்றது.

சாதாரண ஆர்ப்பாட்டங்களின் போது, கலகமடக்கும் பொலிஸார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசும் படையினர், நீர்த்தாரை பிரயோகம் செய்யும் பொலிஸ் வாகனங்கள் உஷார் நிலையில் வைக்கப்படும். எனினும், அதியுயர் பாதுகாப்பு வலயமான பாராளுமன்ற வளாகத்துக்குள் நேற்று (08) நடத்தப்பட்ட பிக்குகளின் ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதற்கான எவ்விதமான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

ஆகையால், 13ஐ அமல்படுத்த அழுத்தம் கொடுக்கும் தரப்பினருக்கு, அமல்படுத்தவே மாட்டோம் என்பதை இவ்வரசாங்கம் பிக்குகளைக் கொண்டு, பாடம் புகட்டியிருக்கின்றது. இல்லையேல், ஏனைய ஆர்ப்பாட்டங்களை இரும்பு கால்களைக் கொண்டு நசுக்கியதைப் போல, பிக்குகளையும் முடக்கியிருக்காலம்.

 ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவுக்கும் இடையில் 1987 ஜூலை 29 ஆம் திகதி, ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதன் பிரகாரமே அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு ‘பெரியண்ணா’ உறவாகும். பெரியண்ணாவின்  குழந்தையை பிக்குகள் தீயிட்டு கொளுத்திவிட்டனர் என்பது மட்டுமே உண்மை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X