2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

பென்டகனின் எச்சரிக்கை

Editorial   / 2021 நவம்பர் 08 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சீனா குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது தொடர்பில், சீனா பரிசீலித்து வருவதாக, பென்டகனின் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அபிவிருத்திகள்’ என்ற தலைப்பில், வௌியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை உள்ளிட்ட சில நாடுகள், சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக மாறுவதற்கு, பெரும்பாலும் இடமுள்ளதாக பென்டகன் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனா, தமது இராணுவம், கடற்படை, விமானப்படை போன்ற படைகளின் பலத்தை, பரந்த பிரதேசத்தில் வலுப்படுத்திப் பேணும் நோக்கில், இலங்கை உட்பட 13 நாடுகளில் இராணுவத்துக்கு வசதி வழங்கும் நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு முயல்கின்றது. இலங்கையுடன் கம்போடியா, மியான்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளில், இந்த நோக்கத்துக்காகச்  சீனா காலூன்றியுள்ளதாக பென்டகனின் புதிய பாதுகாப்பு ஆய்வறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்றதன் பின்னர், சீனாவுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் பரந்தளவில் மிகநுணுக்கமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. “சீனாவின் கடுமையான போட்டியை சமாளிக்கும் வகையில், உங்களது நாடுகளைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காக அரசுகள் உதவ வேண்டும்” என்று ஜனாதிபதி பைடன், ஜி-7 அமைப்பு நாடுகளின் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனாவின் உலக ஆதிக்கத்தை முறியடிக்க, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளும் ஜப்பான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளும் ஓரணிதிரண்டு நிற்கின்றன.

ஆனால், சீனாவோ இவை எவற்றையும் பொருட்படுத்தாமல் தான் வகுத்த திட்டங்களின்படியே, உலகத்தைப் பொருளாதார ரீதியாக வசப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. 

கடன் கிடைத்தால் போதும் என்ற சூழலில் இருக்கும் நாடுகள், சீனாவின் மனோபாவத்துக்கு அடி பணியும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. 

இலங்கை இதற்கு நல்லதோர் உதாரணமாகும். சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை, ஹம்பாந்தோட்டை, கொழும்பு, வடக்கே தீவுப்பகுதிகள் எனப் படிப்படியாக இழந்துவருகின்றது.

பங்களாதேஸின் சிட்டகொங், இலங்கையில் கொழும்பு, பாகிஸ்தானில் க்வாதர் என தெற்காசியாவின் மூன்று முக்கிய துறைமுகங்கள் தற்போது சீனாவின் கைகளைச் சென்றடைந்து விட்டன. இதேபோல், ஏடன் வளைகுடாவில் செங்கடலில் ஆபிரிக்காவையொட்டி அமைத்திருக்கும் ஜிபூட்டியில் ஓர் இராணுவத் தளத்தை சீனா அமைத்துக்கொண்டுள்ளது. இதன்மூலம் ஆபிரிக்கா, இந்துசமுத்திரம், தெற்காசியா ஆகிய மூன்று பகுதிகளின் கடல் ஆதிக்கத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இத்தகைய சீனாவின் நகர்வுகளால், இலங்கையில் சீனாவின் காலூன்றல் குறித்து, அமெரிக்கா மிகுந்த எச்சரிக்கையாகவே உள்ளது என்பதையே அண்மைய அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனின் அறிக்கையில் தெரியவருகின்றது. இந்த இரு வல்லரசுகளையும் இலங்கை, இராஜதந்திர ரீதியில் சாணக்கியமாக கையாள வேண்டும். (06.1.2021)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X