Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 ஒக்டோபர் 28 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
காவல் வைக்கப்பட்ட பூனையால் ‘பாலின்’ நிறம் வெளிறும் அபாயம்
பிரபல்யமாகும் வகையில் பிரசாரங்களை முன்னெடுப்பதிலும் பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்கு, அதிரடியான முடிவுகளை எடுப்பதிலும் கைதேர்ந்தவர்களாலேயே அரசியலில் நிலைத்திருக்கு முடியும். அதற்காகவே, பேசும் பொருளைத் தேவைக்கு ஏற்ப, மாற்றிக்கொண்டிருப்பார்கள். அது, மக்களின் மீது சுமத்தப்பட்ட சுமைகள் மீதான விமர்சனங்களை, சற்று தளரச்செய்துவிடும்.
அவ்வாறானதொரு தீர்மானம் தான், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான, ‘ஒரு நாடு; ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணியாகும். 13 பேர் அடங்கிய இச்செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் உருவாக்கப்பட்டிருப்பதுடன், ஞானசார தேரர் அடங்கலாக, ஒன்பது சிங்களவர்களும் நான்கு முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
பல்லினம் வாழும் ஒருநாட்டில், இரண்டாவது பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் எவருமே, இச்செயலணியில் உள்ளடக்கப்படவில்லை. சிலவேளைகளில், அரசாங்கத்துக்குள் இருக்கும் தமிழ்த்தலைவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் காரணமாக, அச்செயலணியில் மாற்றங்களை ஏற்படுத்தி, தமிழர்கள் தரப்பிலிருந்து இரண்டொருவரை இணைத்துக்கொள்ளக்கூடும். இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். அரசாங்கத்தில் இருக்கும் தமிழர்கள், தமிழ் ஆலோசகர்கள், இணைப்புச் செயலாளர்கள் மற்றும், இன்னோரன்ன பதவிநிலைகளில் இருப்போர், ‘மண்ணெண்ணெய், வேப்பெண்ணை, விளக்கெண்ணை; எவன் எப்படிப் போனா எனக்கென்ன’ என்பதை, தாரக மந்திரமாகக் கடைப்பிடித்து வருவதால், தமிழர்களும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்பது சந்தேகமே!
எந்தவொரு சமூகமாக இருந்தாலென்ன, இவ்வாறானவர்கள் இருக்கும் வரையிலும் எதுவுமே நடந்துவிடாது.
முஸ்லிம்களைத் தூற்றிக்கொண்டே, முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களுக்கு எதிராகக் கடுமையான கெடுபிடிகளைக் கையாண்ட இந்த அரசாங்கம், ‘ஒரு நாடு; ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணியில், தமிழர்களைத் தவிர்த்தமை, தமிழ்பேசும் சமூகங்களுக்கு இடையில், விரிசலை ஏற்படுத்தும் ஒரு யுக்தியாகக்கூட இருக்கலாம்.
இல்லையேல், எதிர்காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில், முஸ்லிம் தரப்பினரை வளைத்துப் போடுவதற்காக, வீசப்பட்ட ஒரு வலையாகக்கூட இருக்கலாம். இல்லை, அப்படியொன்றுமே இல்லை; திறந்தமனதுடன் உருவாக்கப்பட்டதே இந்த ‘ஒரு நாடு; ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணியாகும் என்றால், தமிழர்களைத் தவிர்த்தமை ஏன்?
‘ஒரு நாடு; ஒரே சட்டம்’ என்பதற்குள், தமிழர்கள் உள்வாங்கப்படமாட்டார்களா? இந்தப் பாகப்பிரிவினை, உங்களுக்கு இந்த ஆட்சியில் இன்றேல், இந்நாட்டில் உரிமை இல்லையென்பதைக் கூறாமல் கூறியுள்ளனரா?
இச்செயலணியின் தலைமையைப் பற்றிக் கூறவேண்டிய அவசியமில்லை. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு சிறை சென்றவர். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டவர்களில் ஒருவராவர். இது, இனநல்லிணக்கம் என்ற பாலுக்கு, பூனையைக் காவல் வைத்தமைக்கு ஒப்பானதாகும் என்பதை நினைவூட்டுகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
05 Apr 2025