Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இது அரசியல் செய்யும் நேரமில்லை என்பதை அரசியலில் இருப்பவர்களும், மக்களைக் கவர்ந்து இழுக்கும் வகையிலான அறிவிப்புகளை விடுவதற்கான நேரமும் இல்லை என்பதை அரசாங்கமும் நன்கு புரிந்துவைத்துக் கொள்ளவேண்டும். மக்கள் அன்றாடம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
எனினும், நமது நாட்டை பொறுத்தவரை சாமானிய மக்களை ஓர் ஒதுக்குப் புறமாக வைத்துவிட்டு அரசியல் கட்சிகள் பலவும் அரசியல் இருப்புக்காகவும் அரசியல் கூட்டணிக்காகவும், ஆட்சியை கைப்பற்றும் நோக்குடனும் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.
இல்லையேல், 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆராய்ந்துகொண்டு இருக்கின்றனர், அணிகளைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்றுதான் கூறவேண்டும்.
“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு”, “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஒரு தரப்பு பலப்படுத்த முயற்சிக்கிறது”. “ஆட்களை இழுத்தெடுக்க வேண்டாம்”, “நாங்கள் ஆட்சிபீடம் ஏறுவோம்”, “அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம்”, “சர்வகட்சி மாநாடு”, “13 எதிராக குரல்கொடுப்போம்”, “நாடு துண்டாடப்படுகின்றது” இப்படியெல்லாம் கதையளக்கப்படுகின்றன.
எனினும், விலைவாசி அதிகரிப்பு, பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, இதர சேவைகளின் கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பிலோ அல்லது நாட்டில் ஏற்பட்டிருக்கும் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்தோ எவரும் வாய்திறப்பதில்லை.
பற்றாக்குறைக்கு வரட்சியும், மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. வரட்சியால், விளைநிலங்கள் வரண்டுவருகின்றன. அறுவடைக்குத் தயாராக இருந்த காய்கறிகள் காய்ந்து கருகிவிட்டன. ஆறுகளிலும், குளங்களிலும் நீர் வற்றிவிட்டது. இவற்றுக்கெல்லாம் தூரநோக்கு சிந்தனை இன்மையே பிரதான காரணமாகும். இதன் தாக்கத்தை சாமான்ய மக்கள் எதிர்காலத்திலும் அனுபவிக்கவேண்டும்.
கடந்த பல மாதங்களாக நாட்டில் நிலவிய வரட்சியை அவதானித்து இருந்திருந்தால் மாற்று ஏற்பாடுகளை அல்லது முன்கூட்டிய ஏற்பாடுகள் செய்திருக்கலாம். எனினும், அரசியலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தமையால், எல்லாமே தவிடு பொடியாகிவிட்டது.
கொளுத்தும் வெயிலால், வெளியில் தலையைக் காட்டமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சூட்டைத் தணிப்பதற்கு நீர் அருந்தவேண்டும். நீராகாரங்களை பிள்ளைகளுக்கு உணவாகக் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனினும், தண்ணீர்க் கட்டண அதிகரிப்பால் சாமான்ய மக்கள் பலரும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக கூட்டாஞ்சோறு ஆக்குவதை நிறுத்திவிட்டு, மக்கள் அன்றாடம் முகங்கொடுக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே சாலச் சிறந்தது.
பொருளாதாரத்தில் இருந்து நாடு மீண்டெழுந்துள்ளது என்பது பொய்துள்ளது. பாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது சாதாரண மக்களை வதைக்கிறது. ஆகையால், அதற்குத் தீர்வு காண்பதே காலத்தின் கட்டாயமாகும். அதனை கண்டுக்கொள்ளாவிடின் மக்களும் மறந்துவிடுவார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago