Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 நவம்பர் 12 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணம் செல்லுதல் மட்டுமல்ல, பயணமும் சொல்லாதீர்
வீட்டுக்கு வந்த விருந்தாளி பயணஞ்சொல்லும் போது, “போறேன்” எனச் சொல்லிவிட்டாலும், வீட்டில் உள்ளவர் வௌயில் கிளம்பும்போது “போறேன்” எனக் சொன்னாலும் வீட்டாருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வரும். அந்தளவுக்கு அந்த வசனம் அபசகுனமானது என்பர். “சென்று வருகின்றேன்” என்றுதான் கூறவேண்டும். அப்போதுதான் பலரும் வழியனுப்புவதற்கு வருவர், அப்படியாயின், மீண்டும் வருவேன் என்பதற்கான அர்த்தமாம்.
ஆனால், மரண வீடுகளுக்குச் சென்று “சென்று வருகின்றேன்” எனக் கூறக்கூடாது என்பர். அப்படிச் சொன்னால், மீண்டுமொரு தடவை, உங்களுடைய வீட்டில் மரணமொன்று நிகழும்; அதற்காக வருகிறேன் என அர்த்தமாம். அதனால்தான் பலரும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிடுவர்.
மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடந்தவாரம் பிறப்பிக்கப்பட்டபோது, விடுமுறையைக் கழிப்பதற்காக, பலரும் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பியிருந்தனர். இது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். அவ்வாறானவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றிக் கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும் கொழும்புக்குள் சிக்கிக்கொண்டவர்கள், வெளியேறமுடியாமலும் சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாமலும் சிக்கித் தவிக்கின்றனர். அவ்வாறானவர்கள் தொடர்பில், அரசாங்கம் மீண்டுமொருமுறை சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு, முடக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும், வெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பில், முழுமையான தகவல்களைத் திரட்டி, சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு முயற்சிக்கலாம். அவ்வாறான தீர்மானத்தை அரசாங்கம் எட்டுமாயின், செல்வோரும் மிகக் கவனமாகச் சென்று, தனித்திருந்துவிட்டு திரும்பலாம்.
‘தெரிந்த தேவதையை விடவும், தெரியாத பிசாசு மேல்’ என்பர். இந்தப் பழமொழியை நினைத்தாற்போல பயன்படுத்தாதீர்கள். குறிப்பாக, கொரோனா வைரஸ் எப்படியிருக்கும், எவ்வாறு பரவுமென, எமக்கெல்லாம் தெரியாது. ஆகையால், கண்ணுக்கே தெரியாத ஒன்றிடம் விளையாடிவிடக்கூடாது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நெருங்கிப் பழகியவர்கள் வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர். இன்னும் சிலர், சுயதனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இவையெல்லாம், தொலைபேசி அழைப்புகளின் ஊடாகவே முன்னெடுக்கப்படும்.
அவ்வாறே, “தயாராக இருங்கள்; அம்புலன்ஸ் வரும்” எனக் குடும்பமொன்றுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாத அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று “போய் வருகிறோம்” எனப் பயணம் சொல்லியுள்ளனர். அதனால், அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எதனை, எப்போது செய்யக்கூடாதெனத் தெரிந்திருந்தால், அநாவசியமான பல தொற்றுகளிலிருந்து தங்களைத் தாங்களாகவே காப்பாற்றிக்கொள்ளலாம். மரண வீடுகளுக்குச் சென்று “போய்வருகின்றேன்” என சொல்லாமல் கிளம்பிவிடுவதைப் போல, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குச் செல்கையிலும் சொல்லாமலே கிளம்புவதுதான் யாவருக்கும் நலம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .