2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

பணவீக்கத்தின் வீழ்ச்சி...

Editorial   / 2023 செப்டெம்பர் 17 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணவீக்கத்தின் வீழ்ச்சி; போற்றப்பட வேண்டிய மத்திய வங்கியின் தலைமைத்துவம்

இரட்டை இலக்கங்களில் காணப்பட்ட நாட்டின் பணவீக்க வீதத்தை, ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வருவதில் இலங்கை மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியனவாக அமைந்துள்ளன.

சாதாரண பொது மக்களுக்கு பணவீக்கம் என்பதன் விளக்கத்தைப் பெறுவது கடினமான காரணமாக இருந்த போதிலும், அது உச்சக் கட்டம் தொட்டிருந்த வேளையில், நாட்டில் பெருமளவு நெருக்கடிகள் நிலவியிருந்தமையை உணர முடிந்தது. 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், நாட்டின் பணவீக்க வீதம் 69.8% ஆக பதிவாகியிருந்தது. 1950ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்டதைத் தொடர்ந்து பதிவாகியிருந்த உயர்ந்த பணவீக்கமாக இது அமைந்திருந்தது. இதனால் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

பணவீக்கம் காரணமாக வறுமையில் வசிப்போரும் சமூகத்தில் இலகுவில் பாதிப்புறக்கூடிய நிலையில் உள்ளவர்களும் அதிகமாக பாதிக்கப்படுவது வழமை. உச்சம் தொட்டிருந்த பணவீக்க உயர்வின் போது, இலங்கையின் வறுமை வீதம் 2021ஆம் ஆண்டில் காணப்பட்ட 13.1% என்பதிலிருந்து 2022ஆம் ஆண்டில் 25% ஆக உயர்ந்திருந்ததாக உலக வங்கியின் மத்திய ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது போன்று, உணவு பாதுகாப்பு இன்மை, சுகாதாரம், கல்வி, உணவு உள்ளெடுப்புக்காக செலவிடும் தொகை பெருமளவு குறைந்திருந்தத்துள்ளதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

குறிப்பாக, பணம் அச்சிடலுக்கும் பணவீக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை என பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில், மத்திய வங்கியின் முன்பிருந்த இரண்டு ஆளுநர்களும் பொது வெளியில் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், அரசியல் உயர் மட்டங்களால் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகள், கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக உலக நாடுகள் ஸ்தம்பிதமடைந்தமை போன்ற காரணிகளால், இலங்கையும் கடும் பொருளாதார பின்னடைவுக்கு முகங்கொடுத்தது. குறிப்பாக, பொது மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக் கொள்வதற்கு கூட, நீண்ட வரிசைகளில் நாள் கணக்கில் காத்திருந்து அல்லலுறும் நிலை ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான சவால்கள் நிறைந்த சூழலில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கடமையை பொறுப்பேற்ற தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழான செயலணியால் மேற்கொள்ளப்பட்ட சில சாமர்த்தியமான தீர்மானங்கள், செயற்பாடுகள் என்பவற்றால் அதிகரித்துச் சென்ற பணவீக்க வீதத்தை கட்டுப்படுத்த முடிந்தது.

நாட்டில் பொறுப்புக்கூற வேண்டிய பதவி நிலைகளுக்கு பொருத்தமான தகைமை கொண்டவர்களை தெரிவு செய்யாமையின் பாதிப்புகளை, நாடும் மக்களும் உணர்ந்துள்ளனர். வரலாற்றில் இதற்கு பெருமளவு சான்றுகள் உள்ளன.

தாம் பதவியிலிருந்து ஓய்வு பெற்று அவுஸ்திரேலியாவில் மகிழ்ச்சிகரமான, நிம்மதியான வாழ்க்கையை முறையை முன்னெடுத்து வசித்து வந்த நிலையில், நாட்டுக்காக மத்திய வங்கியின் ஆளுநர் பதவிப் பொறுப்பை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, மீண்டும் இலங்கைக்கு வந்து சேவையாற்றுகின்றமையானது, நாளாந்தம் வெளிநாடுகளுக்கு படையெடுத்துச் செல்லும் இலங்கையின் ஏனைய துறைகளின் அதிகாரிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

12.09.2023

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .