Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Editorial / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பட்டாடைக்குள் ஒளிந்திருந்த ‘டிக்கிரி’யும் கிழட்டு அரசியலும்
பால்குடி மறவாத, யானைக்குட்டிகள் இரண்டை, தாய் யானையிடமிருந்து பிரித்தமைக்கு எதிராகக் எழுப்பப்பட்ட எதிர்ப்புகளுக்கு ஒருபடி மேற்சென்று, 70 வயதான “டிக்கிரி” எனும் பெண் யானையை ஊர்வலத்தில் பயன்படுத்தியமைக்கு உலகளவில் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.
தலதாமாளிகை மதவழிபாடுகளில் பயன்படுத்தும் வகையில், சிறுபராயத்திலிருந்தே பயற்சியளிக்க, அன்று யானைக்குட்டிகள் பிரிக்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இன்று, அதேவழிபாட்டில் கிழட்டு யானையைப் பயன்படுத்தியமை வன்கொடுமை குற்றச்சாட்டாகி உள்ளது.
தள்ளாடும் யானையை ஊர்வலமாக அழைத்துச்சென்று கஷ்டப்படுத்திப் பெறப்படும் ஆசிர்வாதம் எப்படிச் சிறந்ததாக இருக்கமுடியும், நேர்த்திக்கடனைத் தீர்ப்பதற்காக அந்த யானை அழைத்துவரப்பட்டதாயின், பாகன் மேலமர்ந்திருந்தமை எந்தவகையில் நியாயமானதென வினவுகின்றனர்.
பெரஹெரா நிறைவடைந்ததும். ‘டிக்கிரி’யைப் பற்றிய கரிசனையும் ஓரளவுக்குக் குறைந்துவிட்டது. ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகம் சூடுபிடித்துள்ளது. பட்டாடைகளைக் களைந்த பின்னரே, ‘டிக்கிரி’யின் உண்மையான தோற்றம் வெளிப்பட்டது.
அதேபோல, சிம்மாசனத்தில் ஏற்றியதன் பின்னரே, ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், தீர்க்க சிந்தனை, தூரநோக்கு, கரிசனை உள்ளிட்டவை கண்கூடாகும். 70 வயது பெண் யானையின் மீதான கரிசனைக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்துக்கு ஒருபடி மேற்சென்று, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், பெண் வேட்பாளரை நிறுத்துவதிலும் காட்டவேண்டும்.
ஆருடங்களின் பிரகாரம், 70 வயது, அதனை அண்மித்த வயதுகளைக் கொண்ட, ஆண் வேட்பாளர்களே இம்முறையும் களத்தில் குதிக்கவிருக்கின்றனர்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில், பிரதான கட்சிகளில், இரண்டாம் நிலைத்தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவ்வாறு உருவாகிவந்தாலும், இடைச்செருகல்களை முன்னெடுத்து, ஓரங்கட்டப்பட்டுவிடுவர். தேசிய கட்சிகளாக இருந்தாலும் சரி, சிறுபான்மை இனக் கட்சிகளாக இருந்தாலும் சரி, அதேபோன்றதொரு நிலைமையே இன்னும் கடைப்பிடிக்கப்படுகிறது.
பதவி பேராசை, ஒரு கட்சியைக் சின்னாப்பின்னமாக்கிவிடும் என்பது கடந்தகால கண்கூடாகும். அதற்காக, வயோதிபர், கண்தெரியாதவர், காதுகேளாதவர்களையும் மிக உயர்ந்த பதவிகளில், நிறுத்திய வரலாறுகளும் உள்ளன. குடும்ப அங்கத்தவர்களை வரிசைக் கிரமப்படுத்துவது நாகரிகமாகிவிட்டது.
அனுபவமிக்கவர்களை, முடிவெடுக்கும் பதவிகளில் அமர்த்துவதை விடவும், ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். அதனூடாக இளம் தலைமுறையினருக்கு இடங்கொடுக்கவேண்டும். அதுவே, நாட்டின் எதிர்காலத்துக்குச் சிறந்ததாக அமையும்.
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை, தமக்கு வழங்கப்படும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி, வாக்காளர்களால் ஆட்சியை மாற்றமுடியுமாயின், பழைய சட்டங்களை அவ்வாறே, கடைபிடிக்கும் நடைமுறையைக் கைவிட்டு, திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். நவீன யுகத்துக்கு ஏற்ப சிந்திக்கவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில், 35 வயதுக்கு கீழ்ப்பட்டவர் தேர்தலில் போட்டியிடமுடியாதென்ற ஷரத்து உள்ளடக்கப்பட்டதைப் போல, போட்டியிடமுடியாத ஆகக்கூடிய வயது உச்ச எல்லையையும் வகுக்கவேண்டும். (20.08.2019)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
6 hours ago
8 hours ago
9 hours ago