2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

நோயாளிகளுக்கு சாவு மணி அடிக்கும் பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2024 பெப்ரவரி 13 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல சுகாதார சங்கங்கள் சில நாட்களுக்கு முன்பும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அந்நாட்களில், இராணுவ அதிகாரிகள் கடமையாற்றியதன் காரணமாக வைத்தியசாலை சேவைகளை ஓரளவுக்குப் பேண முடிந்தது. என்றாலும் அரச வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்கள் பெரும் சிரமத்துக்கு முகம் கொடுத்தனர்.

இந்நிலையில், இன்று (13) முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகச் சுகாதார சங்கங்கள் அறிவித்துள்ளன. இது நோயாளர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில், எவ்விதமான ஐயப்பாடும் இல்லை.

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை நோயாளர்களுக்கு அதிருஷ்டம் என்றாலும், சுகாதாரத்துறையில் வைத்தியர்கள் அல்லாதவர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நோயாளர்கள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

வேலைநிறுத்தம் என்பது அதிக செலவு மற்றும் மருந்து தட்டுப்பாட்டுடன் போராடும் நோயாளிகளுக்குச் சாவு மணி அடிக்கிறது. சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் போது, நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கு எல்லையே இல்லை.

சில நேரங்களில் அது நோயாளியின் மரணமாகவும் இருக்கலாம். கடந்த சில நாட்களாக மருத்துவமனைகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் படும் அவஸ்தைகளை அனைவரும் பார்த்தனர்.

அரசாங்க அதிகாரிகளின் முயற்சிகள் இருந்தபோதிலும், நிலைமையை எதிர்கொள்வது எளிதான காரியமாக இருக்கவில்லை.

டாக்டர்கள் இருந்தபோதிலும், பல நோயாளிகள் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ஒட்டுமொத்த அரசு மருத்துவமனை அமைப்பும் முடங்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நோயாளிகளின் உயிரைக் கடவுளிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும், சுகாதார சேவையின் ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கடமைக்கு சமூகமளிக்காததன் மூலம் வைத்தியசாலை முறையே முடங்கியுள்ளது என்பது தெளிவாகின்றது.

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை மற்ற சுகாதார ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சீரான முறையில் ஆய்வு செய்ய வேண்டும்.இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கு உள்ளது.

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது நாட்டில் கடுமையான சுகாதாரப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் விசேட வைத்தியர்கள் 250 பேர் உட்பட சுமார் 1,000 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சுகாதாரத்துறையினரின் வேலைநிறுத்த அறிவிப்பால் நோயாளர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது. மருந்துகளின் விலைகள், கொள்வனவு செய்வதற்குப் போதியளவில் பணம் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால், அரச வைத்தியசாலைகளை நாடும் சாதாரண மக்களின் நிலைமை திண்டாடுகின்றது.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் குதித்திருப்போரின் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதேவேளை, நோயாளர்களும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X