2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

நீதி பலவாயின் நாட்டை நிமிர்ந்தெழச் செய்வது கடினமாகும்

Editorial   / 2022 ஜூன் 23 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதி பலவாயின் நாட்டை நிமிர்ந்தெழச் செய்வது கடினமாகும்

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் எதற்கு, அதைச் சாப்பிடமுடியுமா எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர் என, பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, ஸ்திரமான ஆட்சியொன்று இருக்கிறதா, ஜனநாயகம் பேணப்படுகிறதா? என சர்வதேசமும் சர்வதேச நிறுவனங்களும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் என பதிலளித்தார்.

ஆனால், நாட்டில் அரங்கேற்றப்படும் வேண்டாத சம்பவங்களைப் பார்க்குமிடத்து, இரண்டு சட்டங்கள் அல்ல; பல சட்டங்களே அமல்படுத்தப்படுகின்றன. வடக்கு, கிழக்குக்கு தனியோர் அடக்குமுறைச்சட்டம், தென்னிலங்கையில் சகிப்புச் சட்டம்; மேட்டுக்குடியினருக்கு இன்னுமொரு சட்டம், குரல்கொடுக்க எத்தனிப்பவர்களுக்கு வேறொரு சட்டம் என, அடுக்கிக்கொண்டே போகலாம்.

சட்டம் சகலருக்கும் சமமானது எனின், அவற்றை அச்சொட்டாக சகல சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தவேண்டும். வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், அங்கிருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையை விஞ்சுமளவுக்கு பாதுகாப்புப் படையினர் இருக்கின்றனர். ஏதாவதொரு சம்பவம் இடம்பெற்றவுடன், ஆயுதம் தரித்த இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுவிடுகின்றனர்.

எரிபொருள் கோரி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முறை கேடாக விநியோகிக்கப்படுமாயின் எதிர்ப்பு கோஷங்களும் எழுப்பப்படுகின்றன. எனினும், தென்னிலங்கையில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் பாதுகாப்புத் தரப்பினர் தள்ளுமுள்ளில் ஈடுபடுகின்றனர்.

அதேபோல, கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம், அருவருக்கச் செய்துவிட்டது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை மானப்பங்கப்படுத்தும் வகையில் பொலிஸார் நடந்துகொண்டமையை அவதானிக்க முடிந்தது. ஆனால், வடக்கில் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியும் குண்டாந்தடி பிரயோகங்களை மேற்கொண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தமை கண்கூடு.

சர்வதேசத்தின் கழுகுப்பார்வை இலங்கையின் மீது குவிந்திருக்கின்றது என்றால், சட்டவாட்சி முறையாக இருக்கவேண்டும். சிறுபான்மையினருக்கு ஒரு நீதியும், ஏனைய தரப்பினருக்கு மற்றுமொரு நீதியும் கையாளப்படக்கூடாது.

திங்கட்கிழமை (20) வருகைதந்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிகள், 10 நாள்களுக்கு தங்கியிருப்பர். அக்குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவர் என்பதை நினைவில் கொள்க.

மறுபுறத்தில், இனவாதத்தை கக்கும், வெறுப்புப் பேச்சுகளின் தொனிகளும் உச்சஸ்தானியில் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்குமாயின் அதைப்பற்றி பேசக்கூடாது. எனினும்,  முல்லைத்தீவு, குருந்தூர் மலையில், ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலையை நிர்மாணிப்பதை நிறுத்தியமையையும் இனவாத கண்கொண்டு பார்த்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இனங்களின் இரத்தம் கொதிக்குமளவுக்கு வெறுப்புப் பேச்சை பேசியுள்ளார்.

எத்தரப்பினராக இருந்தாலும் இந்த நேரத்தில் மிகவும் பொறுமையைக் கையாள வேண்டும். பேச்சுகளின் ஊடாக உசிப்பேத்தி, பிரச்சினைகளை வேறுபக்கங்களுக்கு திசை திருப்பிவிட முயற்சிக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவே வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X