2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

நஞ்சை விதைக்கவே வேண்டாம்

Editorial   / 2022 ஏப்ரல் 10 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிஞ்சு மனங்களில் நஞ்சை ஒருபோதும் விதைக்கவே வேண்டாம்

நாணயம் ஒன்றுக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல, ஒவ்வொரு செயற்பாடுகளிலும் நல்லது, கெட்டது என்ற இரண்டு பக்கங்கள் இருக்கவே செய்யும். ஆகையால். ஒன்றைக் கையாளும் போது, மிகக் கவனமாகக் கையாள வேண்டும். 

வடக்கு, கிழக்கைப் ​பொறுத்தவரையில், ஒவ்வொரு நாளும், அரசாங்கத்துக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். காணாமலாக்கப்பட்ட தங்களுடைய உறவுகளைத் தேடி, நடத்தப்படும் போராட்டங்களும் நீண்டுகொண்டே செல்கின்றன.

இந்நிலையில், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடுபூராகவும் இரவு, பகலாக முன்னெடுக்கப்படுகின்றன. நீண்ட நேரமல்ல; பல நாள்களாக வரிசையில் நின்றிருந்த மக்கள், கோபமடைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். வரிசையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் பல்வேறு மட்டங்களில் வியாபித்து, தொழிற்றுறை சார்ந்தவர்களும் இறங்கியுள்ளனர்.

அரசியல் கட்சிகள் சார்பற்ற இந்தப் போராட்டங்களில், குழந்தைகளையும் பங்கேற்க செய்கின்றனர். பாடசாலை மாணவர்களும் சிறுவர்களும் சிறுமிகளும் பங்கேற்றுள்ளனர்.

எரிபொருள், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பவற்றால், சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரச்சினை இல்லையென நினைத்தால், அதுதான் முட்டாள்தனமாகும். எனினும், சிறுவர், குழந்தைகளுக்கென ஓர் உலகம் உள்ளது.

உரிமைகளை வெற்றெடுப்பதற்காக குரல் கொடுக்கவேண்டும். எனினும், சில போராட்டங்களின் மீது, கண்ணீர்ப்புகை பிரயோகம், குண்டாந்தடி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது பின்வாங்கி ஓடுகையில், கீழே விழுந்து பலரும் காயமடைந்துள்ளனர்; மயக்கமடைந்துள்ளனர்.

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பலரும், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ​பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் மட்டுமன்றி, எந்தவொரு போராட்டத்திலும், சிறுவர்கள், குழந்தைகள், பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்வது மகா தவறாகும். சிலவேளைகளில், பிஞ்சு மனங்களில் ‘எதிர்ப்பு’ விதைக்கப்படுகிறது. இந்த நஞ்சு, எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை விளைவிக்கும் என்​பதை நினைவூட்டுகின்றோம்.

பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில், ஆராய்வதற்கு பிள்ளைகளுக்கும் இடமளிக்க வேண்டும். இல்லைலேயல் வளர்ந்ததன் பின்னர், எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பத் தொடங்குவர். தீர்வுகளைப் பற்றி சிந்திக்கமாட்டார்கள்.

நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளால், சிறுவர்கள், குழந்தைகள், ​பாடசாலை மாணவர்களே ஆகக்கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

போஷாக்கான உணவு, பரீட்சைக்கான காகிதாதிகள், மின்சாரத் தடை, பாடசாலை வாகனங்களின் கட்டண அதிகரிப்பு, தனியார் வகுப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை இவ்வாறு அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

அதற்காக, சிறார்களை வீதிக்கு இறக்கி, போராட்டக்களத்தில் குதிக்கச் செய்வது, பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைப்பதாகும். இது எதிர்காலத்தை இருட்டாக்கும் என்பதே எமது கணிப்பு. (09.04.2022)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X