Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 நவம்பர் 25 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நகரத்து ஏழைகளால் கொதித்தெழுந்த ‘முட்டாள்’ குரல்கள்
எல்லாவற்றுக்கும் பதில் அளிப்பதை விடவும் சிலவிடயங்களுக்கு அமைதியாக இருந்துவிடுவது, பிரச்சினையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லாது என்பதில், எவ்விதமான ஐயப்பாடும் இல்லை. இடத்தைப் பொறுத்து, ‘மௌன மொழி’யைக் கையாளுவதே சாலச்சிறந்தது.
சில அதிகாரிகளின் பதில்கள், செவிசாய்த்துக் கொண்டிருக்கும் பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கும். பிரச்சினைகளை விளங்கிக்கொள்ள வேண்டுமாயின், கூர்ந்து கவனிக்க வேண்டும். முட்டாள்தனமான பதில்கள், பிரச்சினைகளுக்கே வழிசமைக்கும்.
கொழும்பில், தனிமைப்படுத்தல் பகுதிகளில் முடங்கியிருக்கும் மக்களின் இன்னல்களை உயரிய சபையின் கவனத்துக்கு மனோ கணேசன் எம்.பி கொண்டுவந்தார். அதன்போது, ஆவேசமடைந்த அமைச்சர் விமல் வீரவன்ச, “உட்காரு நீயொரு முட்டாள்” எனக் கூறிவிட்டார்.
“முட்டாள், பேச வேண்டிய இடத்தில் அமைதியாய் இருப்பான்; அமைதியாய் இருக்கவேண்டிய இடத்தில் பேசுவான்” என்ற, ஆங்கிலக் கவிஞர் சியார்ச்சு கார்டன் பைரனின் கூற்றுத்தான் இவ்விடத்தில் ஞாபகத்தில் வருகிறது.
அரசியல்வாதிகள் சுடச்சுட பதிலளிக்க வேண்டும். எதிரணியை வாயடைக்கச் செய்யவேண்டும். அதற்கு முன்னர், தங்களைச் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும்.
“ஐயாயிரம் ரூபாயை ஒருவாரத்துக்குள் செலவழித்துவிட்டால், நாங்கள் என்ன செய்வது” என்ற விமலின் ‘முட்டாள்’ பதில், சமூக ஊடகங்களுக்குத் தீனிபோட்டுக் கொண்டிருக்கின்றன.
“கொழும்பில் வாழ்கின்ற அன்றாட நாட்கூலிகள், ஒருதுளி தண்ணீருக்குக்கூடப் பணம் செலுத்தவேண்டும். இவர்கள் கிராமத்து ஏழைகளைப் போன்றவர்கள் அல்லர்; நகரத்து ஏழைகள்” என, பவ்வியமாய் எடுத்துரைத்த மனோ, கொடுப்பனவை அதிகரித்துக் கொடுக்குமாறு வினயமாகதான் கேட்டுக்கொண்டார்.
தனக்கு வாக்களித்த மக்கள் துன்பப்படும் போதெல்லாம் அமைதியாய், கைகளைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போருக்கு மத்தியில், உரிமைகளுக்காக என்றுமே தைரியத்துடன் பேசும் மனோவின் குரல்தான், உயரிய சபையிலும் ஒலித்தது.
ஒரே மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி சபைக்குச் சென்று, எப்பக்கத்தில் இருந்தாலும் மக்கள் துன்பப்படும்போது, குரல்கொடுக்க வேண்டும்; அரசாங்கத்தைச் சரியாக நெறிப்படுத்தவேண்டும். அப்போதுதான், தமது பிரதிநிதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.
கொவிட்-19 தொற்றுநோய், இன, மத, மொழி வேறுபாடுகளை மறந்து, சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. கொழும்பில் முடக்கப்பட்டிருக்கும் பகுதிகளில், சிறுபான்மையினரே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
எதையுமே இனவாதக் கண்கொண்டு பார்க்கும் விமல் வீரவன்ச, பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் கூட்டத்தில், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையானவர்களாக இருப்பதால், முட்டாள்த்தனமாகப் பதிலளித்திருக்கலாம்.
ஒவ்வொருவருடைய இயல்பான மனநிலையை, கொரோனா வைரஸ் படம்பிடித்துக் காண்பித்து, பாடங்களையும் கற்பித்துக் கொண்டிருக்கின்றது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், இனவாத கண்ணாடிகளை அணிந்திருந்தால், கொரோனா கொன்றுவிட்டுச் சென்றுவிடும்.
ஏழைகளுக்காகக் குரல்கொடுப்பதில் என்றுமே பின்னிற்கக் கூடாது. தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் பிரதேசங்களில் நிலவும் குறைபாடுகளை இனங்கண்டு, தீர்வு காணவேண்டும். இல்லையேல், முட்டாள்களின் பதில்களுக்குக் கேள்விகள் இருக்காது. (23.11.2020)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .