2025 ஜனவரி 29, புதன்கிழமை

தொலைந்து போன கடிதங்களை எங்கு தேடுவது

Editorial   / 2024 செப்டெம்பர் 03 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்து பழைய பழக்கவழக்கங்களில் பல முற்றாகவே அழிந்துவிட்டன. அதில் கடிதம் எழுதுவது காணாமலே​ போய்விட்டது எனலாம். 90 களுக்கு முற்பட்ட காலங்களில் கட்டாயம் கடிதங்கள் எழுதப்பட்டன.

தூர இடங்களில் வாழும் உற்றார் உறவினர்களின் வீடுகளுக்கு விருந்தினராக செல்வதாயின் கட்டாயம் கடிதம் மூலம் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்களும் கடிதங்கள் மூலமாகவே தங்களுடைய இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொண்டனர்.

தற்போது அவ்வாறு இல்லை. நினைத்த நேரத்தில் எந்தவோர் உறவினரிடமும் பேச முடியும். அவர்களுடைய முகங்களை பார்த்து கதைக்க முடியும். அந்தளவுக்கு ​தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இது, வளர்ச்சியாக பார்க்கப்பட்டாலும், உறவினரிடமிருந்து வரும் கடிதத்தை பிரித்து குடும்பமே ஓரிடத்தில் அமர்ந்து இருக்க, ஒருவர் வாசிக்கும் போது, அதிலிருந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.  

தங்களுடைய மத குறியீடுகளை கடிதத்தின் மேல் மூலையில் வரைந்து, ‘அன்புள்ள’ என ஆரம்பித்து ‘இப்படிக்கு’ என முடிக்கும் கடிதத்தின் இடைப்பட்ட எழுத்துக்கள் ஆயிரம், ஆயிரம் உணர்வுகளைச் சுமந்து நிற்கும். அக்கடிதங்கள் பொக்கிஷங்களாக பார்க்கப்பட்டன. காதல் கடிதங்களுக்கு குறைவே இருக்காது. கற்பனை ஊற்றெடுத்து ஓடும். தற்போதெல்லாம், குறுஞ்செய்திக்குள் குறுகிவிட்டது.

புறாக்களில் தூது அனுப்பும் மன்னர் காலம் முதல் கடிதம் வழியாக காதலை வெளிப்படுத்திய கடைசி தலைமுறையான 90களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர்.  கடிதம் என்றால் என்ன தெரியுமா என பாடம் எடுக்கும் அளவுக்கு கடிதங்களின் பயன்பாடு இன்று,  குறைந்து விட்டது.

கடிதங்களின் பங்களிப்பை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும் முந்தைய தலைமுறைக்கு நினைவுகளைப் புதுப்பிக்கும் விதமாகவும் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி உலக கடிதம் எழுதும் தினம் கொண்டாடப்படுகிறது.

கடிதங்களால் ஈர்க்கப்பட்ட பிரிட்டிஷ் எழுத்தாளர் ரிச்சர்ட் சிம்ப்கின் கடந்த 2014ஆம் ஆண்டு உலக கடிதம் எழுதும் தினத்தை அறிமுகப்படுத்தினார். பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுடன் உரையாடும் அவர் "கடிதம் எழுதுங்கள், அது உங்கள் மரபணுவில் இருந்து வெளிப்படும் உணர்வுகளாகவும், உங்கள் கை ரேகைகளோடு பின்னிப் பிணைந்த வார்த்தைகளாகவும் இருக்கும்" என அறிவுறுத்தியுள்ளார்.

90-களுக்கு முன்பு உறவினர்களின் கடிதங்களுக்காகக் காத்திருக்கும் உறவுகளும், இராணுவ வீரனின் நலனை உறுதிப்படுத்த காத்திருக்கும் மனைவியின் ஏக்கமும் தபால் நிலையங்களில் தங்கி இருந்திருக்கிறது. தொலை தூரத்தில் இருக்கும் நண்பனுக்கு எங்கோ இருந்து, மற்றொரு நண்பன் எழுதும் கடிதத்தில் கிண்டலும் கேலியும் கடந்து செல்லும்.

பலரின் கண்ணீர், சிலரின் மகிழ்ச்சி என அனைத்தும் கடிதங்கள் வழியேதான் தெரிவிக்கப்படும். இன்று அனுப்பும் கடிதம் அதற்கான உரிமையாளரை சென்றடையும், அதற்குப் பதில் கடிதம் வரும் வரை காத்திருந்து மகிழ்ச்சி கொள்ளும் உறவுகள் மத்தியில் கடிதம் பொக்கிஷம் தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. என்றாலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இடையே தொலைந்து போன கடிதங்களை எங்கு தேடுவது. 02.09.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .