விவசாயிகள் சூரியனுக்கு நன்றி தெரிவித்து வருடாந்தம் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகையாக தைப் பொங்கல் திருநாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. அத்துடன், தமிழர்களின் தை மாதப் பிறப்பாகவும் இந்நாள் அமைந்திருப்பதுடன், சுப காரியங்களில் ஈடுபட ஆரம்பிக்கும் மாதமாகவும் அமைந்துள்ளது.
இம்முறை இலங்கையில் இந்த தைப் பிறப்புடன் கூடவே வலியும் பிறக்கவுள்ளதாக அறிந்து கொள்ள முடிகின்றது. நாட்டின் அரசாங்க வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதுடன், பல புதிய பொருட்களும் இந்த வற் வரி உள்ளடக்கத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமல்ப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இதன் உண்மையான பாதிப்பு தை பிறப்பின் பின்னரே மக்களால் பெருமளவில் உணரக் கூடியதாக இருக்கும்.
காரணம், சந்தையில் இதுவரையில் காணப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் குறித்த வரி அதிகரிப்புக்கு முன்னதாக தயாரிக்கப்பட்டவையாகும். எனவே அவை தொடர்ந்தும் பழைய விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆனாலும், பண்டிகையுடன், பொது மக்களின் நுகர்வு அதிகரித்திருப்பதால், அவை தீர்ந்துவிடவே, விலை அதிகரிப்புடனான தயாரிப்புகள் மீண்டும் சந்தையில் விற்பனைக்கு வரும்.
அரசாங்க ஊழியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு அதிகரிப்பு வழங்கப்பட்ட போதிலும், தனியார் துறையைச் சேர்ந்த பலருக்கு இந்த ஊதிய அதிகரிப்பு கிடைக்காது.
பெருமளவானோர் தமது தொழிலை தக்க வைத்துக் கொள்வதே பெரும் சிரமத்துக்கு மத்தியிலாகும். இந்நிலையில், வரி அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமையானது, மக்களின் நுகர்வு முறையில் மாற்றத்தை தோற்றுவிக்கும்.
அதாவது, முன்னர் மாதத்துக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்தவர்கள், பின்னர் இரண்டு வாரங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்தனர், இது பின்னர் 1 வாரமாக குறைந்தது.
தற்போது வெறும் நான்கு நாட்களுக்கு போதுமான பொருட்களை கொள்வனவு செய்யும் நிலை தோன்றியுள்ளது. தமது செலவுகளை இயன்றளவு குறைக்க முனையும் சூழலில், வியாபாரங்களும் அவ்வாறான நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளன. மின் கட்டண அதிகரிப்பு, நீர் கட்டண அதிகரிப்பு போன்ற காரணிகளால் அவற்றின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளன. இவற்றை ஈடு செய்ய மாற்று வழிகளைத் தேடுவதில் நிறுவனங்களின் நிர்வாகங்கள் கவனம் செலுத்துகின்றன. அந்த சூழலில், பொது மக்களின் நுகர்வும் குறைவதால், பல நிறுவனங்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன.
மத்திய வங்கியினால் நாணயக் கொள்கைகள் மற்றும் வட்டி வீதங்கள் தொடர்பான கொள்கைகள் தொடர்ந்தும் குறைப்புகள் அறிவிக்கப்பட்ட போதிலும், வங்கிகளில் அவற்றை அவதானிக்க முடியில்லை. தற்போதும் 16 முதல் 18 சதவீதம் வரையான வட்டி அறவீடுகளையே வங்கிகள் மேற்கொள்கின்றன.
இதனால், இலங்கையில் வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உகந்த சூழல் இல்லை என்றே கூறமுடியும்.
வழமையாக, தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை இம்முறையும் பலர் மத்தியில் காணப்பட்டாலும், தை பிறப்புடன் கூடவே வலி தான் அதிகமாக அமைந்திருக்கும் என்பதை கள நிலைவரங்கள் காண்பிக்கின்றன.