2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

துன்பத்தில் உரியும் துரோகிகளிடம் கவனமாய் இருக்கவும்

A.Kanagaraj   / 2020 டிசெம்பர் 05 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

துன்பத்தில் உரியும் துரோகிகளிடம் கவனமாய் இருக்கவும்

ஒரு சாண் வயிற்றை நிரப்பிக்கொள்வதற்காக, கையேந்தி நிற்போரை ஏறெடுத்துப் பார்க்கவோ, வீதியோரங்களில் வீழ்ந்து கிடப்போரைக் கைகொடுத்துத் தூக்கிவிடவோ முடியாத நிலைமையொன்றுக்குள், மனங்களை இறுகக் கட்டிப்போட்டு வைத்துவிட்டது இந்தக் கொரோனா வைரஸ்.

இவ்விரு சந்தர்ப்பங்களுக்கும் பலரும் முகங்கொடுத்திருப்பர்; மனிதாபிமானம் செத்துவிட்டதெனச் சிலர் அதன்போதெல்லாம் யூகித்திருப்பர். வெளியிலிருந்து பார்ப்போரும் 'கல்நெஞ்சுக்காரன்' என்றொரு படத்தையே மனத்திரையில் கீறியிருப்பர். மனிதர்களின் செயற்பாடுகளைப் பார்த்தால், அவற்றுக்கெல்லாம் பதிலளிக்கவேண்டுமா எனச் சிந்திக்கத் தோன்றும்.

எங்கிருந்து, யாரால், எப்படி, எவ்வாறு, வைரஸ் பரவுகிறது என்பதெல்லாம் தெரியாமையால், சுயபாதுகாப்பு என்பதே, அதிமுக்கியமாகி விட்டது. வீடுகளிலிருந்து வெளியேறாமல் விடுவதல்ல; வீட்டுக்குள்ளேயும் யாரையும் வரவிடாது தடுப்பதும் சுயபாதுகாப்புதான்.

இரண்டுமே ஒருவகையான துன்பம்தான். ஒருவரின் துன்பத்தில் குளிர்காய நினைப்பது எளிதானது அல்ல. அதற்கோர் இறுகிய மனம் மட்டுமே இருக்கவேண்டும். கொரோனாவுக்கு முன்னரும், இவ்வாறான படிப்பினைகள் உதாரணங்களாகின. ஆனால், துரோகிகள் மட்டும் இன்னுமே திருந்தவில்லை என்பதை நினைத்தால் மட்டுமே மனது வலிக்கிறது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டவேளையில், கடலலையில் சிக்குண்டு உயிருக்காகப் போராட்டிக் கொண்டிருந்த இளம் யுவதியைக் காப்பாற்றும் போர்வையில் தூக்கியணைத்துச் சென்றவர்கள், அப்பெண்ணிடமிருந்த நகைகளையெல்லாம் அபகரித்துவிட்டு, அப்பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டுத் தூக்கியெறிந்து விட்டனர். இவ்வாறான கயவர்களுடன்தான் நாமும் வாழ்கின்றோம்.

தென்னிலங்கை கரையோரத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தின்போதும், 'மனிதாபிமானம்' செத்துவிட்டதென்றே பலரும் புலம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், முதலாவது கொரோனா அலையின் போது, தனிமைப்படுத்தல் முகாம்களுக்குள் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் வீடுகள் பல சூறையாடப்பட்டன.

தங்களைப் பொதுச் சுகாதார அதிகாரிகளென அடையாளப்படுத்திக்கொண்ட மூவர், வீடொன்றுக்குள் சென்று, அங்கிருந்தவர்களுக்கு மயக்கமடையும் குளிசைகளைக் கொடுத்துவிட்டு, வீட்டிலிருந்த நகை, பணம் போன்ற பெறுமதிமிக்க பொருட்களையெல்லாம் அள்ளிச்சென்றுவிட்டனர். இது இரண்டாவது அலையின் துரதிர்ஷ்டம்.

கொரோனாவுக்கு அஞ்சியிருக்கையில், மாறுவேடத்தில் வீடுபுகுந்து, கொள்ளையடித்துவிட்டுப் பறக்கிறார்கள் என்றால், மக்களிடத்தில் விழிப்புணர்வே இல்லையென்பது உறுதியாகிவிட்டது. வைரஸ் தொற்றியிருக்கிறதா, இல்லையா, என்பதைப் பரிசோதனை செய்வதற்கு, எந்தவிதமான குளிசைகளும் வழங்கப்படாது.

தத்தமது பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறித்து, ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம். இல்லையேல் உயிருக்குக்கூட உலையாகிவிடக்கூடும்.

'உதவி செய்யாவிடினும் பரவாயில்லை; உபத்திரமாவது செய்யாமல் இருக்கவேண்டும்' என்பர். ஒருவர் துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் வேளையில், அவருக்கு உதவிசெய்யாவிடினும் பரவாயில்லை; செயல்களாலும் கடுஞ்சொற்களாலும் அவ்வாறானவர்களைத் துன்பப்படுத்திவிடக்கூடாது; அதுவே வடுவாகிவிடும்.

'கொரோனா வைரஸ்' தொற்றாளர்கள், தனிமைப்படுத்தப்பட்டிருப்போர் ஆகியோருடன் நெருங்கிப் பழகமுடியாது. ஆனால், மனதளவிலேனும் மனிதாபிமான முறையில், அவர்களைக் கொண்டு நடத்தவேண்டும் என்பதையே, நாமும் வலியுறுத்துகின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X