2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

திறந்தவெளி அரங்குகளை தவிர்ப்பதே தற்போதைக்கு சிறந்தது

Mayu   / 2024 மார்ச் 14 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடைமழை ஓய்ந்ததன் பின்னர், வெளியில் உச்சந்தலையைப் பிளக்கும் அளவுக்குக் கடுமையாக அடித்துக்கொண்டிருக்கின்றது. சாதாரணமாக பகல் வேளைகளில் வெளியில் செல்லமுடியாத அளவுக்கு அனல்போன்று இருக்கின்றது.

அந்தளவுக்கு வெளியில் தாக்கம் உள்ளது. வீதியில் சென்று கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து மரணம், பாடசாலைகளில் காலை கூட்டத்தில் நின்றிருந்த மாணவி மரணம், நின்றுகொண்டிருந்தவர் மரணம், பொது இடத்தில் அமர்ந்திருந்தவர் மரணம் என, வெயிலின் தாக்கத்தின் பின்னரான மரணங்கள் தொடர்பிலான செய்திகள் அதிகரித்துள்ளன.

இதற்கிடையே, மரதன் ஓடிய மாணவன் மரணமடைந்த சம்பவம் கிழக்கு மாகாணத்தில், திருகோவிலில் இடம்பெற்றுள்ளது.

பாதிப்படைந்த மாணவனை உரிய நேரத்தில் வைத்தியசாலைக்குக் கொண்டுச் சேர்த்த போதிலும், வைத்தியசாலையின் அசட்டையால் மாணவனின் மரணம் சம்பவித்துள்ளதென மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும், விசாரணைக்குப் பின்னரே உண்மை வெளியாகும்.

ஒவ்வொரு சம்பவங்களுக்குப் பின்னரும் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை கண்டறியப்பட்டாலும், எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் எவ்விதமான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.

இது கவலைக்குரிய விடயங்களாகும். ஆக, கற்றறிந்த பாடங்கள் பயனற்று போகின்றன என்பதே வெளிப்படையாகும். இந்நிலையில், திறந்த வெளிகளில் மாணவர்களை ஆகக்கூடுதலான நேரங்கள் காத்திருக்க விடவேண்டாம் என்றும், மைதானங்களில் மாணவர்களை வைத்திருக்கவேண்டாம் என்றும் கல்வியமைச்சு பணித்துள்ளது.

அதனை ஒவ்வொரு பாடசாலைகளும் பின்பற்றவேண்டும். அதனூடாக வெயிலினால் பாதிக்கப்படுவதில் இருந்து மாணவர்களைக் காப்பாற்றலாம். இந்த காலத்தில், கடுமையான தாகம் ஏற்படும்.

பல பாடசாலைகளில் குடிநீருக்கு வசதி இருக்காது. பாடசாலைக்கும் வீட்டுக்கும் இடையிலான தூரம், நீண்டதாக இருக்கும். அவ்வாறான மாணவர்கள், தங்களுக்குத் தேவையான நீராகாரங்களை எடுத்துச்செல்வது அவசியம்.

உடலுக்குத் தேவையான நீரை அவ்வப்போது அருந்த வேண்டும். இல்லையேல், உடல் வறட்சி ஏற்படும். வறட்சியான காலநிலையின் தாக்கம் கடுமையாகக் குறைவடையும் வரையிலும் பாடசாலைகளில் இல்லங்களுக்கு இடையில் மெய்வல்லுநர் போட்டிகள் நடத்துவதை முழுமையாக நிறுத்திவைப்பது சாலச் சிறந்தது.

இல்லையேல், பாடசாலைக்கும் மைதானத்துக்குச் சென்று வரும்போதே, மாணவர்கள் களைப்படைந்து விடுவர்.

அதுமட்டுமன்றி, மைதானங்களில் திறந்தவெளியில் நீண்டநேரம் காத்திருப்பதன் ஊடாகவும் பாதிக்கப்பட்டு விடுவர்.

இந்த காலகட்டத்தில், நீர்நிலைகள், குளங்கள் வற்றிவிடும், நீரூற்றுகள் வரண்டுவிடும், சின்னஞ்சிறிய விலங்குகள் உட்பட, மிருகங்கள் நீரின்றி கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகும். இவ்வாறான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சிறிய காடுகள் மற்றும் பற்றைகளுக்கு தீ மூட்டும் விஷமிகள், மிருகங்களை வேட்டையாடிவிடுவர்.

வறட்சியான காலங்களில் காடுகளுக்கு தீ மூட்டுவதன் ஊடாக, மழைபெய்யும் என்ற பிற்போக்குத்தனமான சிந்தனையைக் கைவிட்டு, இருக்கும் காடுகளைக் காப்பாற்றுவதற்கும் காட்டுத் தீ பரவாமல் இருப்பதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்த வேண்டும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .