2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

தாய்க்கு இணையான மரியாதையை தாய்மொழிக்கும் வழங்குக

Mayu   / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டு இன்று புதன்கிழமை (21) கொண்டாடப்படுகிறது. உலகத் தாய்மொழி நாளுக்கு நீண்ட, உணர்ச்சி மிகுந்த வரலாறு உண்டு. இந்திய விடுதலைக்கு முதல் நாள் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டது, கிழக்கு வங்கமும் பாகிஸ்தானின் அங்கமாக மாறியது. பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே வங்க மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப் படவில்லை.

அதைக் கண்டித்தும், வங்க மொழியை அங்கீகரிக்க வலியுறுத்தியும் 1952ஆம் ஆண்டு இதே பெப்ரவரி 21ஆம் நாளில் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைவு கூறும் வகையில், அந்நாளை உலக தாய்மொழி நாளாக 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது.

தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக முழக்கமாக உள்ளது. உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்த முழக்கம் தீவிரமடைந்தது.

உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப் பட்ட அதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாய பயிற்று மொழியாக்க வலியுறுத்தி சென்னையில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர். ஆனால், ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லாததால் அன்னைத் தமிழை இன்று வரை அரியணை ஏற்ற முடியவில்லை.

தமிழ் பயிற்று மொழி மட்டும் தான் என்றில்லாமல், கடைகளின் பெயர்ப்பலகைகள், உயர்நீதிமன்றம், திருமணங்கள், ஆலய வழிபாடு என எங்குமே அண்னைத் தமிழைக் காண முடியவில்லை.

இப்படியாக தமிழன்னைக்கு இழைக்கப்படும் அவமானத்தைத் துடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த ஆண்டு உலகத் தாய்மொழி நாளான 2023ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் நாள் சென்னையில் தமிழன்னை சிலையுடன் தமிழைத்தேடி என்ற தலைப்பில் பயணம் தொடங்கப்பட்டு பெப்ரவரி 28 ஆம் நாள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் பயணம் நிறைவு செய்யப்பட்டது.

நமது நாட்டை பொறுத்தவரையில், அரசியலமைப்பில் மட்டுமே, தமிழ் மொழிக்கு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆவணங்கள் சிங்கள மொழியில் அனுப்பப்படுகின்றன.

தமிழ்மொழியில் அனுப்பப்படும் ஆவணங்களிலும் ஏகப்பட்ட கருத்து, எழுத்துப் பிழைகளே உள்ளன. இவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு முன்வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

தாய்க்கு இணையான மரியாதையை தாய்மொழிக்கும் வழங்கப்பட வேண்டும். அன்னை மொழிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் உலகத் தாய்மொழி தினத்தைக் கொண்டாடப்படும் நிலையில், அந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .