Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 மார்ச் 31 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னையே உருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்துவிடாதீர்கள்
‘ஒன்று’ இல்லையென்றால்தான், அதைப் பிரதியீடு செய்யும் பொருளின் அருமை விளங்கும். நெருக்கடியான நிலைமை வழமைக்குத் திரும்பிய உடனேயே, பிரதியீட்டை மூலையில் வீசிவிடுவர்.
சிலவற்றுக்கு பதிலீடு செய்யவே முடியாது. ஆனால், மாற்றீடுகளைப் பற்றிச் சிந்திக்கலாம். வாகனத்துக்கு பெட்றோல் நிரப்புவதில் சிக்கலெனில், பதிலீடாக டீசலை நிரப்ப முடியாது. எனினும், மாற்றீடாக, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம். அண்மைய தூரத்துக்குச் சென்றுதிரும்புவோர் நடந்தும் செல்லலாம்.
காஸ் விலை அதிகரிப்பை அடுத்து, மண்ணெண்ணெய் அடுப்பை கொள்வனவு செய்தனர். காஸ் பற்றாக்குறையின் போது, மின்சார அடுப்பை கொள்வனவு செய்தனர். இப்போது, மின்வெட்டு அமலில் இருப்பதால், இரண்டும் கெட்டான் நிலைமையில் ‘விழிபிதுங்கி’ நின்கின்றனர்.
காஸ் தட்டுப்பாடும் மின்வெட்டும், ஏககாலத்தில் வாட்டி வதைக்கிறது. மின்வெட்டுக்கு மாற்றீடாக, மின்பிறப்பாக்கியை பயன்படுத்துவதிலும் சிக்கல். ஏனெனில், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. மண்ணெண்ணெய் விளக்குகளையும் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மாற்றீடாக, மெழுகுவர்த்தியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதாவது, மெழுகுவர்த்திக்கான கேள்வி நாளுக்கு, நாள் கூடிவிட்டது. குறுகிய நேரத்துக்குள் உருகியும் விடுகின்றது. விலையும் அதிகரித்து விடுகின்றது. தன்னை உருக்கிக்கொள்ளும் மெழுகுவர்த்தியே பலருக்கு ஒளி கொடுத்துக்கொண்டிருக்கின்றது. அதிலும் கையை வைத்து, அணைத்துவிட வேண்டாம்.
அதாவது, மெழுகுவர்த்தியேனும், இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் குறைந்த விலையில், நின்று
எரியக்கூடிய வகையில், தயாரித்து வழங்கவேண்டும். அரசியல் இலாபம் தேடுவதைப் போல, உருகும் மெழுகிலும் இலாபத்தைத் தேட முயற்சிக்கக் கூடாது.
மின்வெட்டு, தண்ணீர் வெட்டு, வரிசையில் நிற்பது, ஒருவேளை உணவைத் தவிர்த்தல் என்பவற்றுக்குப் பழக்கப்பட்டவர்கள், எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு போய்விடுவர். நகர்புறங்களில் மின்விசிறிக்கு பழக்கப்பட்டவர்கள், பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
மின்வெட்டு ஒருபுறமிருக்க, நுளம்புகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. திருடர்களும் கைவரிசையை மிக இலாவகமாக காட்டத்தொடங்கிவிட்டனர். மின்சாரம் இன்றி, சில மணித்தியாலம் ஒளிகொடுக்கும் மின்குமிழ்கள், மின்விசிறி, டோர்ச் லைட் ஆகியவற்றின் விலைகளும் தலைக்குமேல் எகிறி நிற்கின்றன.
நெருக்கடியான நிலைமையின் போது, ஒருவரையொருவர் பாதுகாத்து அரவணைத்துச் செல்லவேண்டுமே தவிர, அதில் குளிர்காய்ந்து இலாபம் தேட முயற்சிக்கக் கூடாது.
பெரும் நகரங்களில் சொந்த வீடு இருந்தாலும், பலபக்க நெருக்கடியால், முறையாகச் சமைக்க முடிவதில்லை. ஹோட்டல்கள் பல இழுத்து மூடப்பட்டுவிட்டன. வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். தொழில்நிமித்தம் நகரங்களில் தங்கிவாழ்வோர், முறையான உணவின்றி உருகிக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே பல இடங்களில், வெளிச்சத்தின் உடனடித் தீர்வான மெழுகுவர்த்திக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக அறியமுடிகின்றது. பாமர மக்களுக்கு ஒளிகொடுக்கும் மெழுகுவர்த்தியை, அணைத்துவிடாதீர்கள் என வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம். (01.04.2022)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago