2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

‘சேனா’ வின் படையெடுப்பால் மடியும் மக்காச்சோளம்

Editorial   / 2023 டிசெம்பர் 12 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அடைமழை, பெய்யுமென ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அந்தளவுக்கு, தற்போது பெய்துகொண்டிருக்கும் அடைமழை, பெரும் சேதங்களை விளைவித்துக்கொண்டிருக்கின்றது. இதனால், விவசாயிகளே கடுமையான பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மண்சரிவுகள், மரங்கள் முறிந்துவிழுதல், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதுடன், வெள்ளம் பெருக்கெடுத்தமையால், தாழ் நிலங்களில், அறுவடைக்குத் தயாராக இருக்கும் விவசாய நிலங்கள் சேறும், சகதியும் கலந்த நிலமாக மாறிவிடுகின்றது. இதனால், விவசாயிகளுக்குக் கடுமையான நட்டம் ஏற்பட்டுள்ளது. 

“விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும்’’ என்பார்கள், ஆனால், காது, மூக்கில் கிடக்கும் நகைகளை அடகுவைத்து, கால்நடைகளை விற்று, கடன்களை வாங்கி, விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இறுதியில் சொச்சமே கைக்கு வந்து சேரும். இடையில், இயற்கை அனர்த்தங்கள், முழு விவசாயத்தையும் அழித்து விடுகின்றன. 

வடக்கு, கிழக்கில் காட்டு யானைகள் வயல்களை மட்டுமன்றி, பயன்தரும் மரங்களைத் துவம்சம் செய்துவிடுகின்றன. குடியிருப்புகளையும் இடித்தழித்து, களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் நெல் மூடைகளையும் பிய்த்தெறிந்து உண்டுவிடுகின்றன. 

காட்டுயானை, குரங்குகள், மயில் உள்ளிட்ட பறவை இனங்கள் சாப்பிட்டதன் பின்னர் எஞ்சியிருப்பதே, விவசாயிகளுக்கு எஞ்சுகின்றன. அவற்றுக்காக கிடைக்கும் பெறுமதி சொற்பமாகும். இதனால், கடனில் இருந்து மீண்டெழ முடியாத விவசாயிகளில் பலர், தவறான முடிவுகளை எடுத்திருந்தனர். 

ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள், விவசாயிகள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான சலுகைகளை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இதனால், விவசாயிகளில் பலர், விவசாயத்தை முற்றாக கைவிட்டுவிட்டு, வேறு தொழில்களுக்குச் சென்று விடுகின்றனர். 

இரசாயன பசளைக்குத் தடைவிதித்து, சேதனை பயன்பாட்டை உடனடியாக அமுல்படுத்தியமையால், உரிய விளைச்சலை ஈட்டமுடியாத நிலைமையும் ஏற்பட்டது. இதனிடையே, பூச்சுகள், கம்பளிப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள் மற்றும் சேனா உள்ளிட்டவை பயிர்களை அழித்துவிடுகின்றன. 

இதில், ‘சேனா’ மக்காச்சேளத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால், சோள விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். சோள அறுவடை பாதிக்குமாயின், திரிபோஷா உற்பத்தி பாதிக்கும், குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் திரிபோஷாவை முறையாக விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்படும். இது போஷாக்கு மட்டத்தில் தாக்கத்தைச் செலுத்தும்.  

கோழிப் பண்ணைகளுக்கு சோளத்தைத் தீவனமாகப் பெறமுடியாது. கோழி முட்டைகளுக்கும் கோழி இறைச்சிக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படும், உள்ளூர் சந்தைகளில் இவற்றின் விலை வானத்தை முட்டிக்கொண்டு நிற்கும். 

மக்காச்சோள நடவுக்கு முன்னர், விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், விவசாயிகள் முகங்கொடுக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சேனாவை அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இருந்திருக்காது. அதனால்தான், கடுமையான தாக்கத்தை செலுத்துகின்றது. 

எவ்வாறெனினும், சேனாவை முற்றாக அழித்தொழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் பெரும் பாதிப்பை சந்திக்கவேண்டும்.

12.12.2023


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X