Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தணலில் ‘மொட்டை’க் கருக்கிவிட்டு, சூரிய நமஸ்காரமா?
ஒருவர் கூறுவதற்குச் செவிசாய்க்காவிடினும், ஒரு சமூகத்தின் உரிமைக்குரலுக்கு செவிசாய்த்தே ஆக வேண்டும். பல்லின சமூகங்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டில், ஆட்சிபீடமேறும் ஒவ்வோர் அரசாங்கமும், சமூக ரீதியில் பல்வேறு நெருக்குதல்களுக்கு முகங்கொடுத்தமையை கடந்தகாலங்களில் கண்டிருக்கின்றோம்.
நெளிவு சுளிவுகளை அறிந்து, அரசியலில் காய்நகர்த்துவோர் நீண்டகாலத்துக்குப் பதவியில் நீடித்திருப்பதில்லை. ஏனெனில், இன, மத, குரோதங்களைத் தூண்டிவிடுவோர், ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்து, இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்காக காகத்தையும் கொக்காக்கிவிடுவர்.
கொவிட்-19 நோய் தொற்றால் மரணமடைவோரை எரியூட்ட வேண்டும் என்ற முடிவில், அரசாங்கமும் அதனோடிணைந்த நிறுவனங்களும் ஒன்றைக்காலில் நின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தங்களுடைய உறவினர்களின் ஜனாஸாக்களைக் கூட, பொறுப்பேற்காமல் முஸ்லிம்கள் விட்டுவிட்டனர். இதனால், ஜனாஸாக்கள் பல அநாதைகளாக்கப்பட்டன.
மரணமடைந்தவரின் உடலிலிருந்து, வெப்பம் தணியும் போதுதான் நோய்க் கிருமிகள் மிகவேகமாகப் பரவுமென்பர். அதனால், சுமார் 24 மணிநேரத்துக்குள் ஜனாஸாக்களைப் புதைத்துவிடுவதையே, முஸ்லிம்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அது அவர்களின் மத மரபுகளில் ஒன்றாகும்.
ஆனால், கொவிட்-19 நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களைப் பொறுப்பேற்றால், அதை எரியூட்ட வேண்டும். இது இஸ்லாமிய மத நம்பிக்கையை நிந்திப்பதாகும் என்றெண்ணிய பலரும், ஜனாஸாக்களைப் பொறுப்பேற்கவில்லை. நாள்கள் கடந்தமையால், ஜனாஸாக்களையும் அநாதைச் சடலங்களின் கணக்கில் இட்டு, கொழும்பு மாநகர சபை எரியூட்டியது.
வயது வித்தியாசங்களின் பிரகாரம் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களே, கொரோனா வைரஸ் தொற்றில் மரணித்துள்ளனர். அவர்களில் பலருக்கும் வேறுபல தொற்றா நோய்களும் இருந்துள்ளன. 10 வயதுக்கும் கீழே, 20 நாள்களேயான, சிசு மரணமும் கொவிட்-19 மரணப் பட்டியலில் முதன்முதலில் இடம்பிடித்துக்கொண்டது.
கொரோனா வைரஸ் தொற்றில், இதுவரையிலும் 154 மரணங்கள் சம்பவித்திருந்தாலும், 20 நாள்களேயான ‘மொட்டை’ செந்தணலில் கருக்கிவிட்ட துரோகம், எங்குமே இடம்பெற்றிருக்க முடியாது. அதற்கெதிராக, அமைதியாக எதிர்ப்பைத் தெரிவித்து, ‘கவன் சீலைப் போராட்டம்’ முன்னெடுக்கப்பட்டது.
இதில், சிறுபான்மை சமூகத்தினர் இணைந்து, ஓரணியில் நின்றிருந்தால், அரசாங்கத்துக்கு பேரழுத்தம் கொடுத்ததாய் அமைந்திருக்கும். ஆனால், ஓன்றுபட்டிக்க வேண்டிய விடயங்களில், இவ்விரு சமூகங்களும் தனித்தே இருந்து கொள்வது, ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பாகி விட்டுள்ளது. எதிர்காலத்தில், இவ்வாறான தவறுகள் இடம்பெறாத வகையில், தீர்மானங்களை எடுப்பது சாலச்சிறந்தது.
இதற்கிடையில், அநாதைச் சடலங்களைப் பலவந்தமாகத் தகனம் செய்யப்படாது என்ற தீர்மானம் வரவேற்கத்தக்கது. எனினும், இது ‘கண்கெட்ட பிறகு, சூரிய நமஸ்காரத்துக்கு’ ஒப்பானதாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களில் ஒன்றைப் பின்பற்றி, மற்றொன்றைக் கடைப்பிடிக்க மறுப்பது, எவ்வகையிலும் நியாயமில்லை என்பதை வலியுறுத்துகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .