Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 18 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீறிப் பார்த்து இருப்பை உறுதி செய்வது காலத்தின் அவசியம்
உன்னுடைய தேவையை, நீ நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின், கதவைத் தட்டு, “தட்டினால்தான் கதவு திறக்கப்படும்” என்பார்கள். தட்டாத எந்தவொரு கதவுமே, தானாகத் திறந்து, உங்களுடைய கோரிக்கைகளை ஒருபோதும் நிறைவேற்றாது என்பதை ஞாபகத்தில் கொள்ளவேண்டும். அதேபோல, முன்வைக்கப்படும் கோரிக்கையும் நியாயமானதாக இருக்கவேண்டும்.
அரசாங்கம், பல சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், பல தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தன. இதனால், பொதுமக்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். சுகாதாரத்துறையால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், 16 நாள்களாக நீடித்தது; நோயாளர்கள் பெரும் அவதிப்பட்டனர்.
போராட்டங்களை முன்னெடுத்திருக்காவிடின், இவ்வாறான தொழிற்சங்கங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் ஆட்சியாளர்கள் மறந்தே இருப்பர். அத்துடன் அத்தியாவசிய சேவைக்குள் உள்வாங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருக்காது. ஆக, நாங்கள் இருக்கின்றோம் என்பதை அவ்வப்போது ஞாபகமூட்ட வேண்டும். ஆட்சியாளர்களும் சீறிப் பார்த்து, தமது இருப்பை உறுதி செய்துகொள்ளவேண்டும்.
மக்கள் துன்பத்தில் விழுந்துவிடாத வகையில், ஆட்சியாளர்களுக்கு ஞாகமூட்டவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு, எதிர்க்கட்சியினருடையது. தற்போதைய எதிர்க்கட்சியை பார்க்குமிடத்து, ‘பாம்புக்கும் வலிக்காமல், தடியும் முறிந்துவிடாமல்’ இருக்கவேண்டும் என்பதைப் போல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இது அவர்களது இருப்பை கேள்விக்கு உட்படுத்திவிடும்.
ஆட்சியாளர்களே அணியைத் திரட்டி, தமது பலத்தை அநுராதபுரத்தில் வைத்து காட்டியிருந்தனர். ஆக, கொரோனா சுகாதார வழிகாட்டல்கள் ஒரு மூலையில் தூக்கியெறியப்பட்டு விட்டது. இந்நிலையில், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியின் மீது அறவிடப்படுவதாகக் கூறப்பட்ட மிகைக் கட்டண வரி அறிவிப்பின் போது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருந்தால், தொழிலாளர்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு தமது பலத்தைக் காட்டியிருக்கலாம்.
அதனூடாக, தமது பயணத்துக்கு ஆரம்பப் புள்ளியை இட்டிருக்கலாம். ஆனால், சின்னச் சின்ன மேடைகளில் ஏறுவதிலேயே எதிரணியினர் குறியாக இருக்கின்றனர். எதிரணியின் பங்காளி கட்சிகள், பல்வேறான கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன. ஆகையால், ஓரணியில் திரண்டு நிற்பதென்பது இயலாத காரியமாகும். எனினும், ‘மிகைக் கட்டண வரி’க்கு எதிராக, ஓரணியில் திரண்டிருக்கலாம். தீண்டாமல் இருக்கும் பாம்பைத் துரத்தித் துரத்தி அடிப்பர். மக்களுக்கு துன்பம் விளைவிக்காது, நிம்மதியாக அப்பாம்பு வாழவேண்டுமாயின், அவ்வப்போது சீறிப் பாயவேண்டும். அப்போதுதான் ஒரு பயமிருக்கும்.
அதனால்தான் என்னவோ, போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். ஆனால், பல சேவைகளை அத்தியாவசிய சேவைக்குள் முடுக்கிவிட்டுள்ளார். ஆக, ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், வேலைநிறுத்தங்கள் உள்ளிட்டவற்றை பெரிதாக எதிர்பார்க்கமுடியாது. இதுதான் தீண்டாமல் சீறியதாகும். இது பாம்புக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதாகவே இருக்கும் என்பதை ஞாபகத்தில் கொள்க. (17.02.2022)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
5 hours ago