Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
A.Kanagaraj / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீண்டிப் பார்த்தல் நல்லிணக்கத்தில் விரிசல்களையே ஏற்படுத்தும்
அடிபட்டுவிட்டு, அமைதியடைந்துவிட்டால், அவ்வாறானவர்கள் திருப்பியடிக்கமாட்டார்கள் என நினைத்துகொண்டு, அவ்வப்போது அவர்களைச் சீண்டிப் பார்ப்பது, அவ்வளவுக்கு நல்லதல்ல. என்றோர் ஒருநாள், திருப்பியடித்துவிட்டால் நிலைமை சிக்கலாகிவிடுமென்பதை மீண்டும் ஞாபகமூட்டுகின்றோம்.
பல்லினங்கள் வாழும் நாட்டில், எடுக்கப்படும் தீர்மானங்கள் ஒன்றுக்கு இரண்டொரு தடவைகள் சிந்தித்துப் பார்த்து எடுப்பதே, எந்த மட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலென்ன, அவ்வனைவருக்கும் பொருத்தமானதாக அமையும். அதனை இனியாவது கடைப்பிடிக்கவேண்டும். இல்லையேல் கசப்புணர்வுகள் விரிசலை ஏற்படுத்திவிடும்.
தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் எத்தனையோ இருக்கின்றன. காஸ் சிலிண்டரில் குமிழ்கள், காஸ் அடுப்புகள் வெடித்தல், பயிர்நிலங்களுக்குத் தேவையான பசளைகள், திரவ பசளை கேன்கள் வெடித்தல், அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம். இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம்.
நாளொன்றுக்கு மூவேளையும் திருப்தியாக உண்ணமுடியாத அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குள் விழுந்துகொண்டிருக்கின்றது. பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்குள் அத்துமீறி நுழைந்து, புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. நல்லபல போதனைகளைக் கூறியிருக்கும் புத்த பிரானை, ஆயுதமாக எடுத்துக்கொண்டு, சிறுபான்மையினரை சீண்டிப்பார்க்கும் கைங்காரியத்தை இனியாவது கைவிடவேண்டும்.
தொல்பொருள் ஆராய்ச்சி எனும் போர்வைக்குள் நின்றுகொண்டு, புத்தர் சிலையை பலவந்தமாக வைத்து, அவ்விடங்களில் ஆராய்ச்சிகளை செய்வது, உலகளாவிய ரீதியில் எங்குமே முன்னெடுக்கப்படாத புதுமையான அகழ்வாராய்ச்சியாகும்.
சிறுபான்மையினர் தங்களுடைய இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, சதாகாலமும் போராட வேண்டியிருக்கின்றது. ஜனநாயகத்துக்கான போராட்டம் ஜனநாயகத்தின் எல்லைவரை மட்டுமே செல்லும். ஆதலால், பிரச்சினைகளைத் திசைதிருப்பவோ அல்லது இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலோ, சீண்டிப் பார்த்தலை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
புத்தர் சிலைகளை வைத்து, தமிழர்களின் பிரதேசங்களை அதட்டாக கைப்பற்றுவது ஒன்றும் புதுமையான விடயமல்ல. அதன், மிக அண்மித்த சம்பவமாகவே, அம்பாறை சங்கமன்கண்டி படிமலை அடிவாரத்தில், நேற்றுமுன்தினம் (11) புத்தர் சிலை வைக்கப்பட்டமையை குறிப்பிடலாம்.
இரவோடு இரவாக வைக்கப்பட்ட அச்சிலை, பொதுமக்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் சாத்வீகப் போராட்டத்துக்குப் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. அது ஒருபுறமிருக்க, வவுனியா, செட்டிகுளம் மெனிக்பாம் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக பயிரிடப்பட்ட உளுந்து பயிர்ச்செய்கையை சேதப்படுத்திய வனவளத் திணைக்களத்தினர் எல்லைக் கற்களை நாட்டி, காணிகளை கையகப்படுத்தியுள்ளனர்.
சிறுபான்மையின மக்களை இவ்வாறு நாலாபுறங்களிலும் வேண்டுமென்றே சீண்டிப்பார்க்கும் அற்பத்தனமான செயல்களைக் கைவிடவேண்டும். அவற்றின் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை மீண்டும், மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
4 hours ago
5 hours ago