2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

சிந்தித்துத் தீர்மானம் எடுப்பது நன்று

Editorial   / 2022 ஜனவரி 12 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வுபெறுவதற்கு முன்னர் சிந்தித்துத் தீர்மானம் எடுப்பது நன்று

இலங்கையின் பெயர், இரண்டு சம்பவங்களால் உலகளாவிய ரீதிக்குச் சென்றிருந்தது என முன்னர் கூறியிருப்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அதிலொன்றுதான், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம். மற்றொன்று, 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை சுவீகரித்ததன் ஊடாக, நாட்டின் நாமம் உலகளவில் பிரபல்யமடைந்திருந்தது.

‘மனிதாபிமான நடவடிக்கை’ எனும் யுத்தத்தின் முடிவின் பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. அதனூடாகவே இலங்கையின் பெயர் இன்னும் சர்வதேசத்தில் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

1996ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணி அவ்வளவாக மிளிரவில்லை; இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடிய இலங்கை வீரர்களின் மவுசு கூடியிருந்தது. பெரும் தொகையில் ஏலத்துக்கு வாங்கப்பட்ட வீரர்களில், விரல் விட்டு எண்ணுக்கூடிய வகையில் இரண்டொரு வீரர்களும் இருந்தனர். அதனையிட்டு ஓரளவுக்குத் திருப்தியடைய முடியும்.

ஒரு நாட்டின் பெயரை உலக தளத்துக்குக் கொண்டு செல்லவேண்டுமாயின், விளையாட்டுத்துறை மிக முக்கியமானதாய் அமைந்திருக்கின்றது. அதற்கான தயார்படுத்தல்கள், ஓய்வின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரையில், தூக்கி நிமிர்த்த முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கின்றது.

மூன்று நாள்களுக்கு தேசிய வீரர்கள் மூவர் ஓய்வை அறிவித்தனர். இது, இலங்கை கிரிக்கெட் அணிக்குள் பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. நிறுவனங்களில் தொழில்புரிவோர்கூட, தங்களுடைய இராஜினாமாவை ஒரு மாதகாலத்துக்கு முன்னர், அறிவிக்கவேண்டும். அந்தப் பணியாளரால் மேற்கொள்ளப்பட்ட பணிகள், தங்குதடையின்றி முன்னகர்த்திச் செல்வதற்கே, இவ்வாறான வரையறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

சில நிறுவனங்கள், ஆட்குறைப்பு செய்கின்றமையால். இராஜினாமா கடிதத்தை கையளித்த திகதியிலிருந்தே, சேவைக்காலம் நிறைவடைந்து விடுவதாக, அறிவித்துவிடுகின்றன. இது கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. ஆனால், இலங்கை கிரிக்கெட்ட வீரர்கள் மூவர், தங்களுடைய ஓய்வை, மூன்று நாள்களுக்குள் அறிவித்து நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளனர்.

நாட்டுக்காக விளையாடுவதை விடவும் வெளிநாடுகளில் லீக்குகளில் விளையாடுவதற்கு ஆசைப்படும் வீரர்களே இவ்வாறான திடீர் தீர்மானங்களை எடுக்கின்றனர் என விளங்கிக்கொண்ட இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி), ஓய்வுப் பெற விரும்பினால் மூன்று மாதங்களுக்குள் அல்லது அதற்கு முன்னர் அறிவிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எட்டியுள்ளது. ஆறுமாதங்களுக்குப் பின்னரே, ‘ஆட்சேபனை இல்லா சான்றிதழ்’ விநியோகிக்கப்படுமென அறிவித்துள்ளது.

ஓய்வு பெறுவதென்பது அவரவர் விருப்பமாகும். எனினும், அடுத்தடுத்த ஓய்வுகளால், இலங்கை கிரிக்கெட் அணிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. ஆகையால், ஓய்வுபெறும் விவகாரத்தில் நீண்டகால திட்டத்தை வகுக்கவேண்டும். ஏற்கெனவே பல குழப்பங்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட்டை ஒழுங்குப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிரடியாக எடுப்பதும் காலத்தின் கட்டாயமாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .