2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

சிந்தனையில் மாற்றம் வரும்வரையிலும் ‘நிமிர்த்த முடியாது’

Editorial   / 2022 மார்ச் 09 , மு.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிந்தனையில் மாற்றம் வரும்வரையிலும் ‘நிமிர்த்த முடியாது’

சிவராத்திரி ஏன்? கொண்டாடப்படுகின்றது என்பது தொடர்பிலான கட்டுரைகள், நம் நாட்டிலிருந்து வெளிவரும் மும்மொழிகளிலுமான பத்திரிகைகள் பலவற்றில் மார்ச் 1ஆம் திகதியன்று வரையற்றப்பட்டிருந்தன. நானா? நீயா? பெரியவன்? போட்டிப்போட்டுக் கொண்டிருக்காமல் ஆணவத்தை கைவிடவேண்டுமென வழியுறுத்தப்பட்டிருந்தது. அதனை, நம்நாட்டு அரசியல் தலைவர்களும் வாசித்து இருக்கக் கூடும்.

எனினும், எடுக்கும் தீர்மானங்களைப் பார்க்குமிடத்து, புரட்டிக்கூட பார்க்கவில்லையென்பது புலனாகிறது. கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற வைபவத்தின் போது, “சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் வென்றவன்” என அழுத்தம் திருத்தமாகவே தெரிவித்திருந்தார். இது, சிறுபான்மையின மனங்களில் ஒருவகையான கீறலை ஏற்படுத்தியிருந்தது.

அந்தக் கீறலுக்குப் பின்னர், எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பலவற்றிலும், சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். பல்லினங்கள் வாழும் நம்நாட்டில், “ஒரே நாடு- ஒரே சட்டம்” தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். எனினும், பல அழுத்தங்களுக்கு மத்தியில் பின்நாளில் இருவர் புகுத்தப்பட்டனர்.

அதற்கும், தாங்கள்தான் அழுத்தம் கொடுத்தோமென சிலர் ஊடகங்கள் வாயிலாக தம்பட்டம் அடித்து, பெயர்களைப் போட்டுக்கொண்டனர். அனுராதபுரத்தில் ஜனாதிபதியால் திரைநீக்கம் செய்யப்பட்ட, பெயர் பலகையில் தனி சிங்களம் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. அழுத்தங்களுக்குப் பின்னர் பின் நாளில் மாற்றப்பட்டது.

இதற்கிடையே சீன மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ் மொழி மட்டுமன்றி சிங்கள மொழியும் கூட, தூக்கியெறிப்பட்ட சம்பவங்களும், தமிழ்மொழியை முற்றாக புறக்கணித்த சம்பவங்களும் ஏராளம் உள்ளன. அவ்வப்போது அழுத்தங்களும் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

ஆக, அரசியலமைப்பில் மொழியுரிமை தொடர்பிலான ஷரத்துக்களைக் கூட விளங்கிக்கொள்ளாதவர்களாக  தீர்மானங்களை எடுப்போர் இருக்கின்றனர் என்பதையிட்டு வெட்கித் தலைக்குணிய வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. இதன் போதுதான், “நாய் வாலை ஒருபோதும் நிமிர்த்த முடியாது” என்பது ஞாபகங்களை நெருடி செல்கின்றன.

இதற்கிடையே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் 'பொருளாதார பேரவை' நியமிக்கப்பட்டுள்ளது. அதாள பாதாளத்தில் விழுந்து கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்த வேண்டியது சகலரதும் பொறுப்பாகும். பொருளாதார சிக்கலினால், ஒவ்வொரு குடிமகனும் பாதிக்கப்பட்டுள்ளான்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடுகளால், குடிசை தொழில் செய்வோர் முதல், பெரும் தொழிற்சாலைகளை வைத்திருப்போரும் பாதிக்கப்படுகின்றனர். இவையெல்லாம் இன, மொழி, மதங்களை பார்த்து தாக்கத்தை செலுத்துவதே இல்லை. ஆனால், தீர்மானங்கள் எடுக்கப்படும் போது, பிரித்தாளும் கொள்கையே இன்னும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வின் தலைமையில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ  உள்ளிட்ட 11 பேர் அடங்கிய பொருளாதார பேரவையை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அந்தப் பேரவையில், சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் இல்லையென்பது வெட்கித் தலைக்குணிய செய்துள்ளது. ஆகையால் சிந்தனையில் மாற்றவேண்டும் இல்லையேல், வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது. (09.03.2022)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X