2025 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

சமூகமட்டத்தில் குறைந்திருக்கும் பாலியல் தொடர்பான அறிவு

Editorial   / 2023 டிசெம்பர் 10 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது நாட்டில் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தற்போதைய நவீனத் தொழில்நுட்ப யுகத்தில், பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கான தேடல்களை  இருபாலரும் பன்னிரண்டு வயதின் ஆரம்பத்திலேயே ஆரம்பிக்கின்றனர். 

பிறப்புறுப்புகள், எதிர் பாலின கவர்ச்சி, மாதவிடாய், உடலுறவு என நீளும் அந்த தேடல் பட்டியலுக்கான விடைகள், துரதிர்ஷ்டவசமாகப் பாடசாலைகளில் கிடைப்பதில்லை. இவ்விஷயங்களில் பெற்றோர்களின் பங்கும் குறைவு. ஏனெனில், பாலியல் கல்வி எமது நாட்டில் இல்லை  சிறுவர், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றமைக்கு இதுவும் ஒரு காரணமாகிறது. 

பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்ணின் பாலியல் குறித்த அடிப்படை சந்தேகங்களைக் கூட ஏதோ பெரிய குற்றம் போல பார்க்கும் பெற்றோர்களின் மனநிலையும் மாற வேண்டும். பாலியல் கல்வி, உடல் உறுப்புகள் பற்றிய அறிவு ஆகியவை தவறாமல் இந்த வயதில் அவர்களுக்குச் சொல்லப்படவேண்டும்.

இன்றைய நிலையில் பாலியல் தொடர்பான அறிவு அல்லது தெளிவு சமூக மட்டத்தில் மிகவும் குறைவான மட்டத்தில் உள்ளது.     பல்வேறு காரணிகளைக் குறிப்பிட்டுக் கொண்டு பாலியல் கல்வி முறைமையை அமுல்படுத்தாமல் இருந்தால் ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, தற்போதைய நிலையில், பாலியல் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்றத்தில்  தெரிவித்திருந்தார். 

இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது, ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.  

 அவருடைய பதவிக்காலத்தின் முதல் வருடத்தில், இப்பிரச்சினையை எதிர்ப்பதற்கான சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்குச் சிறியளவான ஏற்பாடுகளே இடம்பெற்றுள்ளன. தொடர்ச்சியாகப் பதவிக்கு வருகின்ற அரசாங்கங்களைப் பார்க்கின்றபோது, இப்போக்கு இலங்கையில் தொடர்ச்சியாக நிலைத்திருக்கும் என்பதையே எடுத்துக்காட்டுக்கின்றது.  
 பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தும் போது, மதத்தலைவர்கள் பலரும் அதற்குக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

எனினும், நவீன யுகத்துக்கு ஏற்றவகையில், பாடசாலை மட்டத்தில் இருந்தே கொஞ்சம், கொஞ்சமாக அக்கல்வியைப் புகுத்த வேண்டும். இல்லையேல்,  சிக்கிக்கொள்வோரின் எண்ணிக்கை, மரணமடைவோரின் தொகை அதிகரிக்கும். 

பாலியல் உணர்வை ஊக்கப்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துவது, தரமற்ற மருந்துகளின் பயன்பாடு மற்றும் தவறான அளவுகளில்   பயன்படுத்துகின்றமை இந்த உயிரிழப்புக்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இவற்றுக்கு 
பாலியல் தொடர்பான அறிவு சமூகத்தில் குறைவாகக் காணப்படுகின்றமை பாரியதொரு பிரச்சினையாக உள்ளது.

10.12.2023


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X