Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2023 நவம்பர் 27 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதி யுத்தம் 2009ஆம் நிறைவுக்கு கொண்டுவருவதற்கு முன்னைய ஆண்டுகளில் கார்த்திகை மாதம் என்றாலே தென்னிலங்கையில் கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு அதிகரித்தே இருக்கும். யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சில ஆண்டுகள் அவ்வாறே பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
முக்கிய கேந்திர ஸ்தானங்கள் அல்லது முக்கியஸ்தர்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றோர் அச்சத்திலேயே பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
எனினும், யுத்தம் நிறைவடைவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் மாவீரர் தின உரையை, உலகநாட்டு தலைவர்கள் உட்பட உள்நாட்டுத் தலைவர்களும் மிகக் கவனமாகக் கேட்பர். அதற்குப் பின்னரே சமாதான பாதையா? அல்லது யுத்தமா? என்பதைத் தேர்ந்தெடுப்பர்.
சமாதான காலங்களிலும் தாக்குதல்கள் இடம்பெறாமல் இல்லை. வலிந்து தாக்குதல்கள் சமாதானத்தைச் சீர்குலைத்துவிட்டன.
அதன் பின்னர் கடுமையான தாக்குதல்கள் இரு தரப்புகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டன. இதனால், பல உயிரிழப்பு ஏற்பட்டன. பெரும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன.
மாவீரர் தின உரை, ஒவ்வோர் ஆண்டுகளிலும் கார்த்திகை 27ஆம் திகதி மாலை 06.05க்கு ஈகைச்சுடரேற்றியதன் பின்னர் இடம்பெறும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் போராளியான லெப்.சங்கர் (சத்தியநாதன்) இறந்த நவம்பர் 27ஆம் திகதியை தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் நாளாக 1989இல் பிரகடனப்படுத்தினர்.
1982 நவம்பர் 27, அன்று மாலை 6.05 மணிக்கு. லெப்.சங்கர் தனது தாய்நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமிழீழ மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது. தற்போது பொதுமக்கள், சுடரேற்றி நினைவுகூர்ந்து வருகின்றனர்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலேயே இவ்வாறான நினைவுகூரல்கள் இடம்பெற்றன. தற்போதைய காலகட்டங்களில், மாவீரர் துயிலும் இல்லங்களில் தற்காலிகமாக அமைக்கப்படும், நினைவுக்கல் முன்பாகவே நினைவுகூரல்கள் இடம்பெறுகின்றன.
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் முக்கியமானது. கார்த்திகை தீபமும், மாவீரர் நாளும் ஒரேநாளில் வந்துவிட்டால், வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி, தென்னிலங்கையிலும் கார்த்திகை விளக்கீடு செய்யும் தமிழர்களுக்கு பெரும் நெருக்கடியாக அமையும். ஆனால், கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று, பௌத்தர்களும் விளக்கேற்றி வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
அதுமட்டுமன்றி சிவனொளிபாத மலையின் பருவகாலமும் ஆரம்பமாகும். சிவாலயங்களில் சொக்கப்பனம் எரிக்கப்படும்.
அவ்வாறான சிறப்புகளைக் கொண்டது கார்த்திகை பௌர்ணமி என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். எனினும், விளக்கேற்றுவோர் மறைந்த புலிகளை நினைவுகூர்கின்றனர் என்ற சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைமையே இன்னுமுள்ளது.
அவ்வாறான சந்தேக பார்வை களையப்படவேண்டும் என்பதுடன், கார்த்திகை 27, இலட்சியப் பாதையில் இருந்து சங்கர் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள் என்பர் என்பதையும் நினைவூட்டுகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
42 minute ago
52 minute ago
1 hours ago