Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 04 , பி.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சடலங்களில் இனவாதத்தைத் தட்டியெழுப்பும் துர்ப்பாக்கியம்
தற்போது அமலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், மாநாயக்கதேரர்களின் வலியுறுத்தலின் பின்னரே, எடுக்கப்பட்ட தீர்மானமென்பது வெளிப்படையாகும். சுகாதார துறையினரின் பரிந்துரைகளை ஏறெடுத்தும் பார்க்காத, அரசாங்கம் மாநாயக்கரின் கோரிக்கைக்கு செவிசாய்த்துள்ளது.
சிங்கள-பௌத்த அரசாங்கம் என்பதை மீண்டும், மீண்டும் பெரும்பான்மையின மக்களிடத்தில் நினைவுறுத்தும் வகையில், இவ்வாறான அரசியல் வியூகங்களை கையாளக்கூடும். இது, இன்று நேற்ல்ல, காலங்காலமாக கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு முறைமையாகும். ஆனால், மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில், நிபுணர்களின் பரிந்துரைகளுக்கே ஆகக்கூடுதலான முக்கியத்துவத்தை வழங்கவேண்டும்.
எந்த மதத்தலைவராக இருந்தாலும் அன்பு, கருணை, சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை, உள்ளிட்டவற்றை ஒவ்வொருவரிடத்திலும் ஊட்டவேண்டும். இதுவே, காலத்தின் தேவையாகும். ஆனால், தற்போதிருக்கும் மதத்தலைவர்களின் ஒருசிலரின் செயற்பாடுகளை பார்க்குமிடத்து ஐயுறவுக்கொள்ளவேண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர், மரணிப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் எகிறிகொண்டே செல்கின்றன. இதனிடையே, கொரோனா மரணங்களின் தரவுகளை அரசாங்கம் மறைப்பதாகவும் மேஜர் ஜெனரல் ஒருவரே இவ்வாறு தரவுகளை திரிபுபடுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த யட்டியந்தோட்ட சந்திரானந்த தேரர், கொரோனா தொற்றில் மரணிப்போரின் சடலங்களை இன ரீதியாக அதாவது, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என வகைபிரித்து அடையாளங்கண்டு, தரவுகளை அம்பலப்படுத்தவேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளார்.
யாரை? எப்பொழுது கொரோனா கொல்லுமென ஒவ்வொருவரும் பதற்றத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், கொரோனா சடங்களை சுரண்டி அதிலிருந்து இனவாத அரசியல் கக்கி, அதிலிருந்து கிளம்பும் தீயில் குளிர்காய நினைக்கின்றார் இந்த மதகுரு. இது, மலசலத்தில் ஏதொவொன்றை தேடுவதற்கு ஒப்பானது என்றால் தவறுமில்லை.
பௌத்த தேரர்களின் கோரிக்கைகளுக்கு எல்லாம் செவிசாய்த்தாலும், இந்தக் கோரிக்கையை மட்டும் எக்காரணங்களையும் கொண்டு கணக்கிலெடுக்கக்கூடாது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின், இனங்களுக்கிடையில் பாரிய விரிசலொன்று ஏற்பட்டுவிடும்.
கொரோனாவால் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உயிரிழக்கின்றனர் அல்லது பாதிக்கின்றனர் என்ற பிற்போக்குத்தனமான புள்ளிவிவரங்களை தேடிப்பார்க்காது, ‘மனிதர்கள் மரணிக்கின்றனர்’ என மனிதாபிமானத்துடன் பார்க்கவேண்டும்.
இந்நிலையில், யட்டியந்தோட்ட சந்திரானந்த தேரரின் கருத்துக்குப் பதிலளித்த ஊடகவியலாளர் ரொஷான் வட்டவலவின் தைரியத்தையும் பாராட்டியே ஆகவேண்டும். இனவாதத் தீயைக் கக்கிய தேரரின் வாயை அடைப்பது போல , ‘மனிதம்’ எவ்வாறானது என்பதற்கு, தேன் சொரிந்தாற்போல வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிட்டு பதிலளித்துள்ளார்.
ஒவ்வொரு மனிதரின் உடம்பிலும் ஓடுவது சிவப்பு இரத்தம்; இனங்களின் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதுடன், பல்லின மக்கள் ஒவ்வொருவருடைய இனத்துவ அடையாளமும் பாதுகாக்கப்பட்டு, மதிப்பளிக்கப்பட வேண்டும் என வலியுத்துகின்றோம். (03.09.2021)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago