Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெடும் முன்னரே, இணையவழியில் ‘விழி’ப்பாய் இருப்போம்
ஒன்றை இழந்துவிட்டு, பரிகாரங்களைத் தேடி அலைவதை விட, நல்லது, கெட்டதை அறிந்து, வகை பிரித்துக் கையாள்வது யதார்த்தத்துக்கு உசிதமாய் அமையும். ஏனெனில், கொவிட்-19 நோய் தொண்டைக்குழியை மூடி, உயிரைப் பறிப்பது மட்டுமன்றி, கண் பார்வையையும் பறிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 நோயின் பெரும்தொற்றுக்குப் பின்னர், பெரும்பாலான செயற்பாடுகள் இணைய வழியிலேயே உள்ளன. கொடுக்கல் வாங்கல் முதல், வங்கிச் செயற்பாடுகள், வீடுகளிலிருந்து அலுவலகக் கடமை, கல்வி நடவடிக்கைகள், ஏன் பூஜை வழிபாடுகள் கூட இணைவழிக்குச் சென்றிருக்கிறன. இதில் சில அவசியமற்றவை.
இந்த இணையவழிக் கல்விச் செயற்பாடுகள், வயது வித்தியாசமின்றி, முன்னெடுக்கப்படுவதால், குடும்பமொன்றில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேலே பிள்ளைகளைப் கொண்டிருக்கும் பெற்றோர், கடும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். நாளொன்றுக்காக கொள்வனவுச் செய்யும் மீள் நிரப்பு அட்டைகளும் வலி நிறைந்தவை.
சிலர், காது, கழுத்தில் கிடப்பதை அடகுவைத்து, கடன்பெற்று, கைக்கு அடங்காத திறன்பேசியை வாங்கிக்கொடுத்துள்ளனர். மலையகத்தில் பெருந்தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அது பெரிய பிரச்சினையே இல்லை, ஏனெனில், இணையவழிக் கல்வியும் எட்டாக்கனியாகவே அவர்களுக்கு இருக்கின்றது.
இணைவழி கல்விச் செயற்பாடுகளால், பெரும்பாலான மாணவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்படுவதாக மாத்தறை வைத்தியசாலையின், விசேட நிபுணர் ஜயசிங்கஹ இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கடும் அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா,“இணைய வழி வகுப்புகளில், சிறிய அலைபேசிகளைப் பாவிப்பதன் மூலம் கண் பாதிக்கப்படலாம்” என எச்சரித்துள்ளார்.
தீர்மானங்களை எடுக்கும் போது, மிகக் கவனமாய் இருக்கவேண்டும். மீளவும் திறக்கப்பட்ட பாடசாலைகள் கொரோனா வைரஸ் அச்சத்தால் மீண்டும் மூடப்பட்டன. 2021 முதலாம் தவணைக்கு திறப்பதற்கான தீர்மானம் டிசெம்பர் 31ஆம் திகதி எட்டப்படவுள்ளது.
ஆகையால், மூன்றாந்தவணை விடுமுறையை முழுமையாக வழங்கி, இணைவழி கல்விச்செயற்பாடுளை இடைநிறுத்தி வைக்கலாம். அத்துடன், எட்டு அல்லது ஒன்பதாம் தரத்துக்கு கீழ்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு ‘இணைய வழி’ கல்விச்செயற்பாடுகளை முழுமையாக நிறுத்திவிடலாம். அது அவர்களின் எதிர்க்கால கல்விச் செயற்பாடுகளில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தாது.
நாளொன்றுக்கு பல மணிநேரம், திறன்பேசியின் வெளிச்சத் திரையை கூர்ந்து அவதானிக்கும் சிறுவர்களுக்கு, கண்கள் மட்டுமன்றி, கழுத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறியமுடிகின்றது.
‘தலை குனிந்து கற்பவன், தலைநிமிர்ந்து வாழ்வான்’ என்பர், ஆனால், இணைவழியில், ‘தலை நிமிர்ந்து கற்பவன், கழுத்தொடிந்து தலைகுனிந்து நடப்பான்’ என்ற புதுமொழிக்கு ஆளாகி விடாது. கண்ணைப் போல் அல்ல, கண்களைக் காத்துக்கொள்வோம் என வலியுறுத்துகின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .