Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வோர் அனுபவமும் வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்பிக்கும் என்பதை அனுபவங்களின் ஊடாகவே புரிந்துகொள்ள முடியும். அதற்காகப் பல தடைகளைத் தாண்டவேண்டும். மாணவர்களைப் பொறுத்தவரையில், தேசிய பரீட்சைகளே முக்கியமான தடை தாண்டல்களாகும்.
தற்போது வெளியாகியிருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பிரகாரம், பரீட்சைக்குத் தோற்றிய அத்தனை பரீட்சார்த்திகளும் தங்களுடைய திறமைகளை சுரண்டிப் பார்த்துக்கொண்டனர். பலரும் தடையைத் தாண்டியுள்ளனர். சிலருக்கு கைகூடவில்லை. எனினும், தாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிப்பதற்கு இன்னும் காலமிருக்கிறது.
ஒவ்வொரு படியையும் தாண்டும் போது, வெற்றி - தோல்விகள் இருக்கத்தான் செய்கின்றன. பயணிக்கும் பாதையில், எவ்விதமான பிரச்சினைகளும் இடையூறுகளும் இன்றிப் பயணிக்கின்றோம் என்றால், மற்றுமொருவரின் அடிச்சுவட்டில் பயணிக்கின்றோம்; இல்லையேல், புதிதாக எதையும் பரீட்சித்துப்பார்க்க முயலவில்லை என்பதே அர்த்தமாகும்.
மாணவர்களைப் பொறுத்தவரையில், ஏதோவொரு புதிய விடயத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான வெட்டுப்புள்ளியை, தாங்கள் கடக்கவில்லையென சோர்ந்து போகக் கூடாது. ஏனெனில், கொரோனா உள்ளிட்ட பல்வேறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தே, இம்முறை பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்; அவர்களின் முயற்சிகளுக்குப் பாராட்டு.
‘முயற்சி திருவினையாகும்’ வரையிலும் முயன்று கொண்டே இருப்பதுதான் மாணவர்களுக்கு அழகு. ஆகையால், முயற்சியை ஒருபோதும் கைவிட்டுவிடாதீர்கள். இந்தப் பரீட்சையில், இரண்டு கைகளுமின்றி, இடது காலால் பரீட்சை எழுதிய மாணவி, மூன்று பாடங்களிலும் அதிதிறமை சித்தியைப் பெற்றுள்ளார். ஆக, அங்க குறைபாடுகள் வெற்றிக்குத் தடைகள் அல்லவென அம்மாணவி நிரூபித்துள்ளார்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஐந்தாம் தர புலமைப் பரீட்சை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, உயர் தரப் பரீட்சை ஆகியன முக்கிய மூன்று தடை தாண்டல்களாகும்.
ஆகையால், உயர் தரப் பரீட்சையின் எல்லைக் கோட்டை கடக்காதவர்கள், மீண்டுமொரு தடவை முயல வேண்டும். வாழ்க்கைக்கு ஒரு பாடமாக தோல்விகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; தளர்ந்துவிடக்கூடாது. கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியாதவர்கள், ஏனைய துறைசார் கல்வியை பயில்வதற்கு முன்வரவேண்டும்.
அதேபோல, பெரும் நகரங்களில் சாதாரண தொழில்களில் ஈடுபடுத்திக்கொள்வதற்காக, பலரையும் கவர்ந்திழுக்கும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுக்கக்கூடும். அவற்றை எல்லாம் கருத்தில் எடுக்காது. கற்றுக்கொண்டே முன்னேறுவதற்கான பாதையைத் தேடிக்கொள்ள வேண்டும்.
தோல்வி அடைந்துவிட்டோம் என மனம் சோர்ந்து, சாதாரண வேலைகளுக்குச் சென்றுவிட்டால், கடந்து வந்த 12 ஆண்டுகளுக்கு, எவ்விதமான பிரயோசனமும் கிடைக்காது. எதிர்காலத்தையும் வெறுமனே கடந்து செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுவிடும்.
இதுவும் கடந்த காலத்தைச் சேர்ந்தவர்களின் அனுபவ பகர்வாகும் என்பதை நினைவில் கொண்டு, வெற்றிக்கான படிக்கற்களாக குறைபாடுகளை மாற்றிக்கொண்டு, அதில் பயணிக்க வேண்டுமென வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். (2022.08.31)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago