Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலந்தாழ்த்தி எடுக்கும் முடிவு: பலதையும் ‘காலந்தாழ்த்தும்’
முடிவுகளை எடுக்கும் போது, கலந்துரையாடி, ஆராய்ந்து, வாதப்பிரதி வாதங்களின் பின்னர் எடுக்கவேண்டுமெனப் பலரும் அறிவுரை கூறுவதே வழமை. எனினும், அவசரமாக எடுக்கவேண்டிய தீர்மானங்களை, அவ்வப்போதே எடுக்கவேண்டும். கொவிட்-19 நோய் தொற்றுக் காலத்தில், ‘காலந்தாழ்த்தல்’ பொருந்தவே பொருந்தாது.
கொவிட்-19 நோயின் இரண்டாவது அலை, வியாபிக்கும் போது, முழுநாட்டையும் மூடியிருக்க வேண்டுமெனப் பொதுவெளியில் பலர் கூறினர். எனினும், “முழு நாட்டையும் முடக்குவது, மூன்றாவது தீர்மானமாகவே இருந்தது” என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டுக்குக் கூறியிருந்தார்.
முதல் சந்தர்ப்பத்தில் கிடைக்கும் அனுபவங்களை வைத்துத்தான், அடுத்தடுத்த கட்டங்களில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, வியாபிக்கும் பகுதிகளை இனங்கண்டு, அப்பிரதேசங்கள் மட்டுமே முடக்கப்பட்டன.
இதனால், ஏனைய பிரதேசங்கள் வழமைபோன்று இயங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் எவ்விதமான சிக்கலும் ஏற்படவில்லை. ஒருபுறம் முடக்கம்; மறுபுறத்தில் இயக்கியமையின் ஊடாக, முக்கிய துறைகளின் செயற்பாட்டில், தொய்வின்மையைப் பேணமுடிந்தது.
திறந்திருக்கும் பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்கலாம்; அத்தியாவசிய தேவைகளுக்காகச் சென்றாலும், சமூக இடைவெளியைப் பேணவேண்டும். இல்லையேல், கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
கொவிட்-19 நோய் தடுப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டு, பெறுபேறுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனவரியில் நடத்தப்பட இருப்பதாகக் கூறப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள், ஆறு வாரங்களுக்குக் காலந்தாழ்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, ஒவ்வொரு மாணவனினதும் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வதை, காலந்தாழ்த்திக் கொண்டே இருக்கும்.
வாழ்க்கையோட்டத்தின் முதலாவது தடைதாண்டலே, சாதாரண தரப் பரீட்சையாகும். அதன்பின்னரே, அடுத்தடுத்த ‘படிகள்’ தீர்மானிக்கப்படுகின்றன. இந்தக் ‘காலந்தாழ்த்தலை’யும் பரீட்சார்த்திகள் பயன்படுத்திகொண்டால், எதிர்பார்த்ததை விடவும் சிறந்த பெறுபேறுகளைப் பெறலாம். அதுவே வாழ்க்கைக்கு ஒளியூட்டும்.
மறுபுறத்தில், மூன்றாம் தவணைக்காகப் பாடசாலைகளை முழுமையாகத் திறக்காது, சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்காக மட்டுமே, நேரசூசியைத் தயாரித்து, ஒவ்வொரு பாடங்களுக்கும் மேலதிகமாக நேரத்தை ஒதுக்கி, விடயதானத்துக்குப் பொறுப்பான ஆசிரியரை, அந்நேரத்துக்கு மட்டுமே அழைக்கும் தீர்மானத்தை எடுப்பது, இத்தருணத்தில் பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறான தீர்மானத்தின் ஊடாக, ‘பாடசாலை கொரோனா கொத்தணி’ உருவாகுவதை முழுமையாகத் தவிர்க்கலாம்; சமூக இடைவெளியைப் பேணலாம். கை கழுவுவதற்கான மேலதிக வசதிகள் தேவையில்லை. நீர் வீண் விரயமாவதைத் தடுக்கலாம்.
ஒவ்வொரு பாடத்திலும் மேலதிக அவதானத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் செலுத்தமுடியும். சில பாடசாலைகளைத் தவிர, கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில், பாடசாலைகளை முழுமையாகத் திறந்து, கொரோனா வைரஸ் உட்புகுந்துவிடுவதற்கு இடமளிக்காது, ‘காலந்தாழ்த்தாது’ தீர்மானம் எடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றோம். (02.12.2020)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .